கிளாம்பாக்கம் பிரச்சினைக்கு தீர்வு காண்போம் ; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறப்பதில் அவசரம் காட்டியதால் பயணிகளுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.;
கவர்னர் மீது உரிமை மீறல் கடிதம் பரிசீலனையில் உள்ளது - சபாநாயகர் அப்பாவு
கவர்னர் ஆர்.என்.ரவி மீது அவை உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரி சபாநாயகர் அப்பாவுக்கு காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை கடிதம் எழுதி இருந்தார். இதுதொடர்பான அந்த கடிதத்தில், “மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களுக்கு வணக்கம்... விதி எண். 220ன் படி நேற்று (12.02.2024) கவர்னர் உரையின் போது சட்டசபையில் கவர்னரின் பேச்சு குறித்து அவை நீக்கப்பட்ட சில பகுதிகளை உள்நோக்கத்தோடு சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் வெளியிட்ட கவர்னரின் செயல்பாடுகள் குறித்து அவை உரிமை மீறல் தீர்மானத்தில் விவாதிக்க அனுமதிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் உரிமை மீறல் கடிதம் குறித்து சபாநாயகரிடம் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அவர், “கவர்னர் மீது உரிமை மீறல் கடிதம் பரிசீலனையில் உள்ளது” என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
அத்திக்கடவு- அவிநாசி திட்டம் பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டன - அமைச்சர் துரைமுருகன்
சேலம் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வறண்ட 100 ஏரிகளுக்கு நீரேற்றி மூலமாக நீர் நிரப்பும் திட்டம் அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டது. ஆனால், தற்போது அந்த பணி சுணக்கமாக நடைபெற்று வருகிறது, இதை துரிதப்படுத்த வேண்டும் என்று சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், வேகமாக, துரிதமாக இந்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து, கேள்வி எழுப்பிய அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன், “60 ஆண்டுகள் கனவுகளாக இருக்கக்கூடிய அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை சுமார் 1,682 கோடி ரூபாயில் அந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு, 90 % அ.தி.மு.க. ஆட்சியில் முடிக்கப்பட்டன. மீதமுள்ள 10 % பணிகள் தி.மு.க. பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் முடித்து உள்ளீர்கள். இருந்தாலும், சோதனை ஓட்டம் என்ற முறையில் சில இடங்களில் ஏரிகளுக்கு, குளங்களுக்கு தண்ணீர் வரவில்லை என்ற அச்சம் மக்களிடையே உள்ளது. இதனை அரசு பரிசீலிக்க வேண்டும்” என்று கூறினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், “அத்திக்கடவு -அவிநாசி திட்ட பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டன. குழாய்கள் பதிக்கும் சில இடங்களில் இழப்பீடு தருவதில் பாக்கி இருப்பதால், அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்கு விரைவில் தொடக்க விழா நடத்தப்படும்” என்று அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை: நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் கோரிக்கை
தமிழ்நாடு சட்டசபையின் 2-வது நாள் அமர்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், “சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் தரப்பில் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அது குறித்து விரைவில் சபாநாயகர் முடிவு எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று முதல்-அமைச்சர் மு,க.ஸ்டாலின் கூறினார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர், “எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகள் தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு விளக்கம்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து செல்லூர் ராஜு எம்.எல்.ஏ. கேட்ட கேள்விக்கு அமைச்சர் சேகர் பாபு பதில் அளித்தார்.
இதுதொடர்பாக அமைச்சர் சேகர் பாபு கூறுகையில், “கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் அடிப்படை வசதிகள் படிப்படியாக செய்யப்பட்டு வருகின்றன. கிளாம்பாக்கத்தில் ரெயில் நிலையம் 6 மாதத்திற்குள் அமைக்கப்படும். இட நெருக்கடியால் கிளாம்பாக்கத்திற்கு பஸ் நிலையம் மாற்றப்பட்டுள்ளது.
குடிநீர், கழிப்பறை, சுமைகளை தூக்க டிராலி, பேட்டரி கார்கள், நடைமேம்பாலம், மின் தூக்கி என இவ்வளவு வசதிகள் உள்ளன. தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையம் என பெயர் வைத்ததால் அவதூறுகளை பரப்பி வருகின்றனர்” என்று அவர் கூறினார்.
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் குறித்த கேள்வி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்
சென்னை,
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் நேற்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், கவர்னர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த சூழலில் தமிழ்நாடு சட்டசபையின் 2-வது நாள் அமர்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதில் முதலாவதாக முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் மறைவு குறித்த இரங்கல் குறிப்புகளும், தே.மு.தி.க. தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் வெங்கிடரமணன், கண் டாக்டர் பத்ரிநாத், தமிழ்நாடு முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி, தமிழக முன்னாள் தலைமைச் செயலாளரும் ஒடிசாவின் முன்னாள் கவர்னருமான ராஜேந்திரன் ஆகியோரின் மறைவு குறித்த இரங்கல் தீர்மானமும் வாசிக்கப்பட்டது.
இதனையடுத்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு எம்.எல்.ஏ.க்கள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.
இந்நிலையில் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறப்பதில் அவசரம் காட்டியதால் பயணிகளுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும் சிறு சிறு பிரச்சினைகளை சரி செய்த பிறகே கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், பதில் சொல்லும்போது என் பெயரை அமைச்சர் கூறியதால் விளக்கம் அளிக்கிறேன் என்றும், கொரோனா காலத்தில் கட்டுமான பணி நடைபெறாததால் அ.தி.மு.க. ஆட்சியில் கட்டப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் குறித்து எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "சிறிய பிரச்சினைகள் மட்டுமல்ல.. பெரிய பிரச்சினைகளையும் தீர்த்து வைத்துதான் பஸ் நிலையம் திறந்தோம். கிளாம்பாக்கத்தில் பிரச்சினைகள் இருந்தால் கவனத்திற்கு கொண்டு வாருங்கள். நேரில் அழைத்துச் செல்கிறோம்... பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம். இந்த பிரச்சனையை இத்துடன் முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் கூறினார்.