கட்டிட காண்டிராக்டரை கடத்தி ரூ.5 லட்சம் பறிப்பு

கட்டிட காண்டிராக்டரை கடத்தி ரூ.5 லட்சம் பறிப்பு

Update: 2022-12-28 18:45 GMT

போத்தனூர்

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த கட்டிட காண்டிராக்டரை கடத்தி சென்று ரூ.5 லட்சம் பறித்த வழக்கில் பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கட்டிட காண்டிராக்டர்

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை போத்தனூர் அருகே சுந்தராபுரம் மாச்சம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 42). இவர் தனக்கு தெரிந்த நபர்களிடம் முக்கிய அரசியல் பிரமுகர்கள், அரசு உயர் அதிகாரிகள் தெரியும் என்பதால் அரசு வேலை வாங்கி தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். மேலும் இதற்காக ஏராளமான நபர்களிடம் பல லட்ச ரூபாய் பணம் வாங்கி உள்ளார். ஆனால் அவர் கூறியபடி அரசு வேலை வாங்கி தரவில்லை என்று தெரிகிறது.

இவரிடம் கிணத்துக்கடவு துணை கருவூல அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரியும் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த முருகன் என்பவர் தனக்கு தெரிந்த நபர்களுக்கு அரசு வேலை வாங்கி தரும்படி அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் வரை பெற்று மணிகண்டனிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் வேலை கிடைக்காததால் விரக்தி அடைந்த நபர்கள் முருகனிடம் பணத்தை திருப்பி வாங்கி தரும்படி நெருக்கடி அளித்தனர். இதனால் அவர் மணிகண்டனிடம் சென்று பணத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளார். ஆனால் அவர் பணத்தை திருப்பி கொடுக்காமல் தொடர்ந்து ஏமாற்றி வந்து உள்ளார்.

கடத்த முடிவு

இதையடுத்து முருகன் தனக்கு நெருக்கமானவர்களின் உதவியுடன் மணிகண்டனை கடத்தி சென்று பணத்தை வாங்க முடிவு செய்தார். இதையடுத்து கடந்த 25-ந் தேதி மணிகண்டன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வெளியே சென்றிருந்தார். இதனை அறிந்து கொண்ட முருகன், அவரது நண்பர் ராஜா, வனிதா உள்பட 6 பேர் மணிகண்டனின் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவரது மனைவி இருந்துள்ளார். அவரிடம் பணத்தை திருப்பி தரும்படி மிரட்டினர்.

மேலும் மணிகண்டனை தொடர்பு கொண்டு உடனடியாக வீட்டிற்கு வரும்படி கூறினர். இதையடுத்து மணிகண்டன் பதறியடித்து கொண்டு வீட்டிற்கு வந்தார். தொடர்ந்து அந்த கும்பல் அவரை மிரட்டியதுடன், அவரது காரில் நாகை மாவட்டம் சீர்காழிக்கு கடத்தி சென்றனர். அங்கு நாகை-காரைக்கால் ரோட்டில் வைத்து வேறு காருக்கு அவரை மாற்றினர். பின்னர் ரூ.20 லட்சம் பணத்தை கொடுத்தால்தான் விடுவிப்போம் என்று கூறி மிரட்டினர்.

இதனால் பயந்து போன மணிகண்டன் ரூ.5 லட்சம் பணத்தை உடனடியாக கொடுத்தார். பின்னர் ரூ.15 லட்சத்திற்கு ஒரு பத்திரத்தில் கையெழுத்து வாங்கி கொண்டனர். இதனை தொடர்ந்து அந்த கும்பல் மணிகண்டனை அவரது வீட்டில் கொண்டு வந்து விட்டனர். இதையடுத்து மணிகண்டன் கோவை போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருவூலக அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரியும் முருகன், வனிதா, ராஜா ஆகிய 3 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்