கியாஸ் கசிந்த எண்ணெய் கிணறை ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் ஆய்வு

கோட்டூர் அருகே கியாஸ் கசிந்த எண்ணெய் கிணறை ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2023-10-09 18:45 GMT

கோட்டூர்:

கோட்டூர் அருகே கியாஸ் கசிந்த எண்ணெய் கிணறை ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

எண்ணெய் கிணறு

டெல்டா பகுதியான தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட விவசாய நிலங்கள் அருகில், குழாய் பதித்து எண்ணெய் எடுக்கும் திட்டத்தை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் செயல்படுத்தி வந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல போராட்டங்களை நடத்தி வந்தனர்.

அப்போது கோட்டூர் அருகே சேந்தமங்கலம் ஊராட்சி பெரியகுடி கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அமைத்த 2 எண்ணெய் கிணறுகள் 2013-ம் ஆண்டு அதிக அழுத்தம் காரணமாக கட்டுக்கடங்காமல் வெடித்து 100 அடி உயரத்திற்கு மேல் சிறு கற்களோடு எரிவாயு வெளியேறி தீப்பிடித்து எரிந்தது.

கியாஸ் கசிவு

இதனால் சுற்றுவட்டார கிராமங்களில் அச்சமும் பதற்றமும் நிலவியது. அதை தொடர்ந்து இந்த எண்ணெய் கிணறுகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மூடப்பட்ட எண்ணெய் கிணற்றில் இருந்து நேற்றி முன்தினம் அதிகளவு கியாஸ் வெறியேறியது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எந்த நேரத்திலும் விபத்து ஏற்படும் சூழல் நிலவுவதால் உடனடியாக ஓ.என்.ஜி.சி. துறை அதிகாரிகள் கேஸ் வெளியேறும் பகுதியினை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதை தொடர்ந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அலுவலர் சுரேஷ் தலைமையில் அலுவலர்கள் 4 பேர் மீட்டர் மூலம் ஆய்வு செய்து கச்சா எண்ணெய் மற்றும் கியாஸ் வெளியேறவில்லை, காற்று மட்டும் வெளியேறுகிறது அதில் விரைவில் அடைத்து விடுவோம் என்று தெரிவித்தனர்.

அதிகாரிகள் ஆய்வு

இதை தொடர்ந்து நேற்று ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் நிரவியில் இருந்து ஜெனரல் மேனேஜர் சுந்தர், முதுநிலை பாதுகாப்பு அதிகாரி உத்திராபதி, உதவி பாதுகாப்பு அதிகாரி ஆதித்யா, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி தமிழ்ஒளி ஆகியோர் பெரியகுடி கிராமத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி. கிணற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் பாதுகாப்பான முறையில் எந்த விதமான கசிவும் வராத அளவிற்கு அடைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்