மீன்பிடி தடைக்காலத்தை மாற்றி அமைக்க வேண்டும்; மீனவ அமைப்பினர் கருத்து

மீன்பிடி தடைக்காலத்தை மாற்றி அமைக்க வேண்டும்; மீனவ அமைப்பினர் கருத்து

Update: 2023-06-11 21:09 GMT

கடலில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டு தோறும் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்தை அரசு அறிவிக்கிறது. நடப்பாண்டு கடந்த ஏப்ரல் 15-ந்தேதியில் இருந்து வருகிற 14-ந்தேதி வரை அமலில் உள்ளது. இந்த காலகட்டத்தில் 240 குதிரை திறன் கொண்ட விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது என அரசு அறிவுறுத்தி உள்ளது.

அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வரையுள்ள பகுதிகளில் 700-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. அவற்றில் 590 மீனவ கிராமங்களில் இருந்து ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க தற்போது தடை உள்ளது. மீதம் உள்ள சில கிராமங்கள் மேற்கு கடற்கரையில் வருவதால் அவர்களுக்கு மின்பிடி தடைகாலம் கிடையாது. தமிழகத்தில் உள்ள மீன்பிடி தடைக்காலம் மீனவர்களுக்கும், மீன்களுக்கும் பொருத்தமாக இல்லை என்பதால் அரபிக் கடல் பகுதிகளில் உள்ள மாநிலங்களில் இருப்பது போன்று அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மீன்பிடி தடைக்காலத்தை அமல்படுத்த வேண்டும் என்று மீனவர்கள் சங்கத்தினர் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து மீனவர்கள் அமைப்புகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அளித்த கருத்துகள் வருமாறு:-

பொருத்தமான தடைக்காலம்

அனைத்து மீனவர்கள் சங்க தலைவர் நாஞ்சில் ரவி:-

ஆரம்ப காலகட்டத்தில் 45 நாட்களாக இருந்த மீன்பிடி தடைகாலம் சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்து 61 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 14 கடலோர மாவட்டங்களில் ஆண்டுக்கு ஆண்டு மீன்வளம் குறைந்து கொண்டே வருகிறது. இந்த மீன்பிடி தடைக்காலத்தை பெரும்பாலான மீனவர்கள் முழு மனதோடு ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம் குறிப்பிட்ட இந்த மீன்பிடி தடைகாலம் மீனவர்களுக்கு பொருத்தமற்ற முறையில் உள்ளது. தமிழகத்தில் மீனவர்கள் இந்த மீன் பிடித்தடைக்காலத்தை மேற்கு கடற்கரை மாநிலங்களான கேரளா, கோவா, மராட்டியம் போன்ற மாநிலங்களில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் பொருத்தமாக வைத்து உள்ளனர். அதேபோன்று, தமிழகத்திலும் மாற்றி அமைக்க வேண்டும். குறிப்பிட்ட அந்த காலகட்டத்தில் அவர்களுக்கு கோடை மழை பெய்யும். அத்துடன் காற்றும் அதிகமாக வீசுவதால் உயிர்ச்சேதம் ஏற்படக்கூடாது என்பதற்காக சரியான காலகட்டத்தில் அவர்களுக்கு மீன்பிடி தடைக்காலம் வருகிறது. மழைக்காலத்தில் மீன் பிடித்தடை காலம் அங்கு அமலில் இருப்பதால் அங்கு மீன்கள் இனப்பெருக்கம் அதிகளவில் நடக்கிறது. ஆனால் இங்கு கடுமையான வெயில் இருக்கக்கூடிய இந்த நேரத்தில் மீன்கள் இனவிருத்தி செய்கிறதா? செய்யவில்லையா? என தெரியாமல் இந்த மீன்பிடித் தடைகாலத்தை அமல்படுத்தி வருகின்றனர். மற்ற மாநிலங்களில் உள்ளது போன்று நல்ல மழைக்காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் தமிழக மீனவர்களுக்கும் மீன்பிடி தடைக்காலத்தை பொருத்தமான மாதங்களில் அமல்படுத்தினால் நன்றாக இருக்கும்.

உப்புத்தன்மை அதிகரிக்கும்

மீன் மற்றும் படகுகள் ஏற்றுமதியாளர் ஜெ.மகிபன்:-

மீன்கள் இனப்பெருக்கத்திற்காக தான் மீன்பிடி தடைக்காலம் கொண்டு வரப்பட்டு உள்ளது. ஆனால் தமிழ்நாடு, புதுச்சேரியில் அமலில் உள்ள மீன்பிடி தடைக்காலம் என்பது கோடைக்காலத்தில் 61 நாட்கள் என்று அறிவித்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது ஒரு முரண்பாடானதாகத் தான் பார்க்கப்படுகிறது. பொதுவாக மழை, வெள்ளம் காரணமாக கடலின் உப்பு தன்மை குறையும் போதுதான் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும். எனவே மழைக்காலத்தில் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்துவதுதான் சரியானதாக இருக்கும். கோடைக்காலங்களில் தண்ணீர் சூடாக இருக்கும் போது ஆக்சிஜன் குறைவதுடன், உப்புத் தன்மையும் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் மீன்கள் குளிரான பகுதிகளை நோக்கி இடம் பெயரும். எனவே அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மீன்பிடி தடைக்காலம் அமைப்பதுதான் மிக பொருத்தமாக இருக்கும். இதற்கான நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.

அறிவியல்பூர்வ ஆய்வு

தமிழக மீன்வளத்துறை இணை இயக்குனர் (ஓய்வு) தில்லைகோவிந்தன்:-

கடல்வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. இக்காலக்கட்டத்தில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் என்பதால் மீன்வளத்தை பாதுகாக்க இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில் விசை படகுகள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்படும். திருவள்ளூர் தொடங்கி கன்னியாகுமரி வரை மீனவர்கள் இந்த காலத்தில் மீன் பிடிக்க செல்ல மாட்டார்கள். பொதுவாக மீன்கள் ஒரு இடத்தில் இல்லாமல் உணவைத் தேடி எப்போதும் வெவ்வேறு இடங்களுக்கு சென்று கொண்டே இருப்பது வாடிக்கைதான். இனப்பெருக்கத்திற்காகவும், மீன் உற்பத்தி அதிகரிப்பதற்காகவும் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து நாடு முழுவதும் உள்ள கடலோர பகுதிகளில் மீன்பிடி தடைக்காலத்துக்கான மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் காலநிலை மாற்றத்தால் தற்போது கடல்களில் மீன்கள் கிடைப்பதிலும் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக அரபிக்கடல் பகுதியில் கிடைக்கும் சாளை மீன்கள் தற்போது அதிகளவில் வங்காள விரிகுடா கடல் பகுதிகளிலும் கிடைக்கிறது. எனவே மீண்டும் அகில இந்திய அளவில் ஒரு பெரிய அளவில் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வரலாம். மாறாக அனுபவ பூர்வமாக எந்த முடிவும் எடுப்பது சரியாக இருக்காது.

விலை உயர்வு

ஈரோடு மீனவர் நலம்நாடும் சங்க மாவட்ட செயலாளர் என்.எம்.எஸ்.சின்ராஜ்:-

மீன்பிடித்தடைக்காலம் தொடங்கி விட்டாலே, ஈரோட்டுக்கு கடல் மீன்கள் வரத்து அடியோடு குறைந்து விடும். கடல் மீன்கள் இல்லை என்றால் கடைக்கு வரும் மக்கள் கூட்டமும் குறைந்துவிடும். குறைந்த மீன் வரத்து, அதிக விலை காரணமாகவே இந்த சிக்கல் ஏற்படுகிறது.

ஈரோடு மார்க்கெட்டுக்கு ஊழி, வஞ்சிரம், வவ்வால், வௌமீன், பாரை, நண்டு, பொடுவா, இறால், மத்தி, அயலை, நெத்திலி என்று பல்வேறு வகை மீன்கள் வருகின்றன. தடைக்காலம் தொடங்கிய பின்னர் ஊழி, வஞ்சிரம், மத்தி ஆகிய மீன்கள் மட்டுமே வருகிறது. தடைக்காலத்துக்கு முன்பு ரூ.370-க்கும் குறைவாக விற்ற ஊழி ஒரு கிலோ ரூ.450 முதல் ரூ.480 வரை விற்கவேண்டியது உள்ளது. இதுபோல் வஞ்சிரம் மீன் கிலோ ரூ.1000-த்தை தொட்டு விட்டது. இப்படி விலை உயர்ந்தால் பொதுமக்கள் எப்படி மீன் வாங்கி சாப்பிடுவார்கள்.

எனவே தடைக்காலத்தில் மொத்த படகுகளில் 20 சதவீதம் வரையாவது ஆழ்கடல் செல்லாமல் கரையை ஒட்டி இயக்க அனுமதி அளித்தால் ஓரளவு மீன்கள் கிடைக்கும். இதன் மூலம் விலை உயர்வது, தட்டுப்பாடு ஏற்படுவது தவிர்க்கப்படும்.

கடல் மீன் சுவை

ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியை சேர்ந்த மீன் பிரியர் எம்.காளியப்பன்:-

மீன்களில் சுவை என்றால் அது கடல் மீன்கள்தான். பொதுவாக ஈரோட்டுக்கு ராமேசுவரம், தூத்துக்குடி மற்றும் நமது தமிழக கடற்கரையோரங்களில் இருந்து மீன்கள் வரும். ஆனால், தடைக்காலம் வந்துவிட்டால் கேரள பகுதி மீன்கள்தான் வரும். இதனால் விலை தாறுமாறாக உயர்ந்து விடும். இதனால் விரும்பிய மீன் வாங்கி சாப்பிட முடியாது. கிடைக்கும் மீனை சாப்பிட வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறோம்.

கடல் மீன்களுக்கு மாற்றாக ஆற்று மீன்களை சாப்பிடலாம் என்றால், கடல் மீன்கள் சாப்பிட்டு பழகியவர்களுக்கு ஆற்றுமீன் சுவை பிடிக்காது. பெயரளவுக்கு மீன் சாப்பிடுகிறோம் என்று சாப்பிட வேண்டியதுதான். ருசித்து சாப்பிட முடியாது. கடல் மீன்கள் விலையும் அதிகமாக உள்ளது. மீன்பிடி தடைக்காலம் அவசியமானதுதான். ஆனால் அதன்காரணமாக மீன்பிடி மற்றும் விற்பனை தொழிலில் இருப்பவர்கள் பாதிக்கப்படாமலும், மீன் சாப்பிடுபவர்கள் ஏக்கம் அடையாமலும் இருக்க வேண்டும். மீன்பிடி தடைக்காலம் மழைக்காலத்தில் இருந்தது என்றால் யாரும் கடுமையாக பாதிக்க வாய்ப்பு இல்லை. இதுபற்றி உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்