பள்ளி, கல்லூரிகளில் பாலியல் குற்றங்களைத் தடுப்பது எப்படி?- கல்வியாளர், உளவியல் ஆலோசகர்கள் கருத்து

பள்ளி, கல்லூரிகளில் பாலியல் குற்றங்களைத் தடுப்பது எப்படி?- கல்வியாளர், உளவியல் ஆலோசகர்கள் கருத்து

Update: 2023-04-07 23:06 GMT

காலங்கள் கடந்தபோதும், நாகரிகங்கள் வளர்ந்தபோதும் பெண்களின் மீதான வன்முறைகளும், பாலியல் தாக்குதல்களும் குறைந்தபாடில்லை.

வரதட்சணை, தொடுதல், பாலியல் வன்கொடுமை, பாலியல் வன்கொடுமைக்கான முயற்சிகள் என பெண்களின் மீதான தாக்குதல்கள் என்பது நீண்டுகொண்டே செல்கின்றன.

பள்ளிகள், கல்லூரிகள் என எங்கு சென்றாலும் சொல்ல முடியாத துயரத்தை பெண்கள் அனுபவித்து வருகிறார்கள்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான துன்புறுத்தல்கள் குறித்தான புகார்கள் அதிகரித்திருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய மகளிர் ஆணையம் தகவலும் தெரிவித்திருந்தது.

பாலியல் குற்றங்கள்

இந்தியாவில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க போக்சோ சட்டம் உள்ளது. 18 வயதுக்கு கீழ் உள்ள அனைத்து குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவார்கள். ஆனால், பள்ளிகளில் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததால் பல பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும்போதும் வெளியே சொல்லப்பயப்படுகிறார்கள்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கடந்த 5 ஆண்டுகளை காட்டிலும் கணிசமாக அதிகரித்து இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பள்ளி, கல்லூரிகளில்...

சமீப காலமாக பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல் குறித்த சம்பவங்களும், புகார்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. எனவே, பாலியல் துன்புறுத்தல்கள் பற்றியும், அவற்றை எவ்வாறு தடுப்பது என்பது குறித்தும் விழிப்புணர்வு சிறு வயதில் இருந்தே பெண் பிள்ளைகளிடம் ஏற்படுத்துவது அவசியம் ஆகிறது.

இதுகுறித்து பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

குடும்ப கட்டமைப்பு

ஈரோடு கொல்லம்பாளையம் தமிழ்நகரை சேர்ந்த மனநல டாக்டர் ஈ.எஸ்.எம்.சரவணன்:-

பள்ளிக்கூடம், கல்லூரிகளில் தவறு நடப்பதற்கான சூழ்நிலை உருவாவதை தவிர்த்து வந்தாலே பெரும்பாலான குற்ற சம்பவம் தவிர்க்கப்படும். குறிப்பாக விளையாட்டு, சுற்றுலா, கல்லூரி விழா உள்ளிட்ட கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு ஆசிரியருடன் மாணவியை தனியாக அனுப்பாமல், சில மாணவிகளை உடன் அனுப்பி வைக்க வேண்டும்.

மது, கஞ்சா போன்ற போதை பொருட்களை மாணவர் பயன்படுத்தி இருந்தால், மாணவிகள் விலகி இருக்க வேண்டும். போதை பொருட்களை பயன்படுத்தினாலே சுய கட்டுப்பாடு இழக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக பெற்றோர் தங்களது குழந்தைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இன்றைய தலைமுறையினர் மத்தியில் சந்தோஷம் என்பதற்குரிய புரிதல் குறைவாக உள்ளது. பாடுவது, நடனம் ஆடுவது, சிறப்பாக சமைப்பது, பிறருக்கு உதவி செய்வது போன்ற பிடித்த விஷயத்தை செய்வதால் மனதை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள முடியும். எனவே 'என்ஜாய்மென்ட்' என்பதற்குரிய சரியான அர்த்தத்தை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கணவன்-மனைவி உறவு சரியான புரிதலுடன் இருந்தால் குடும்ப கட்டமைப்பு உறுதியாக இருக்கும். அன்பு, பாசம், அக்கறை இருக்கும்போது ஒரு மாணவர் தவறான பாதைக்கு செல்லமாட்டார். எந்த வயதிலும் தவறு நடப்பதை காண முடிகிறது. ஆனால் குடும்ப கட்டமைப்பு சரியாக இருக்கும்போது தவறுகள் அவசியம் குறையும்.

சமூக வாழ்வியல் கல்வி

ஈரோடு எஸ்.கே.சி.ரோடு மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கூட தலைமை ஆசிரியை கே.சுமதி:-

பாலியல் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பாலியல் குற்றவாளி என்று அழைக்கிறோம். மேலும் பாலியல் என்ற வார்த்தையை கேட்டாலே பலரும் கொச்சை வார்த்தையாக நினைக்கிறார்கள். பாலியல் கல்வி அவசியம் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அந்த வார்த்தையை கேட்கும்போது மாணவர்களும், பெற்றோர்களும் முகம் சுளிப்பதை காணமுடிகிறது. அதேசமயம் பாலியல் தொடர்பான விழிப்புணர்வு மாணவ-மாணவிகள் மத்தியில் மிகவும் அவசியமான ஒன்று. அதனை "சமூக வாழ்வியல் கல்வி" என்ற தலைப்பில் மாணவ-மாணவிகளுக்கு கற்று கொடுக்கப்பட வேண்டும்.

பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அதிக செல்லம் கொடுத்தும், அதிக கண்டிப்புடனும் வளர்க்கக்கூடாது. அதனால் சமூகத்தில் அந்த குழந்தை ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்படும்போது தங்களது பெற்றோரிடம் தகவல் தெரிவிக்க தயக்கம் காட்டுகிறார்கள். எனவே அன்புடனும், அளவான கண்டிப்புடனும் குழந்தைகளை வளர்க்க வேண்டும். தனக்கு தவறான சம்பவம் நடக்க இருப்பதை உணர்ந்ததும் மாணவிகள் எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும். அந்த இடத்தில் யாராக இருந்தாலும் தயக்கம் காட்டக்கூடாது. செல்போன் பயன்பாடு கல்வி கற்பதற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். எனவே பெற்றோர் அனைவரும் தங்களது குழந்தைகளின் செல்போன் பயன்பாட்டை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். எது சரி? எது தவறு? என்று குழந்தைகளுக்கு அவசியம் கற்றுக்கொடுக்க வேண்டும். சமூகத்தில் நடந்த ஒரு விஷயத்தை மாணவி தனது பெற்றோரிடம் கூறும்போது திட்டாமல், என்ன நடந்தது என்று உறுதுணையாக இருந்து கேட்க வேண்டும். இல்லையென்றால் ஒரு தவறு நடந்து இருந்தால் நம்மை இனிமேல் பள்ளிக்கூடம், கல்லூரிக்கு பெற்றோர் அனுப்ப மாட்டோர்களோ என்ற தயக்கம் அவர்களுக்கு ஏற்பட்டு விடும். அதையே தவறு செய்பவர்களும் தங்களுக்கு சாதகமாக்கி கொள்வார்கள். அதற்கு பெற்றோர் இடம் கொடுக்கக்கூடாது. சிறுமிகளுக்கு பாலியல் தொடர்பான துன்புறுத்தல் ஏற்பட்டால் 1098 என்ற சைல்டு லைன் உதவி எண்ணை அழைக்கலாம். மேலும் பாதுகாப்பு குறைவான இடங்களில் பெண்கள் தனியாக செல்லும்போது காவலன் செயலியை தங்களது செல்போன்களில் பயன்படுத்த வேண்டும்.

விழிப்புணர்வு முகாம்

ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி டி.சரவணன்:-

ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் பாலியல் தொடர்பான குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் வகையில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக ஈரோடு, பர்கூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் பாலியல் துன்புறுத்தல், சிறுமிகள் கடத்தல், குழந்தை தொழிலாளர்கள், கொத்தடிமையாக வைத்திருப்பது, குழந்தை திருமணம், தற்கொலை முயற்சி தடுப்பு போன்றவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மாணவி தொடர்பான தகவல் கிடைத்ததும் நாங்கள் அங்கு சென்று விசாரணை நடத்துவோம். அப்போது தவறு செய்தவர் நெருங்கிய உறவுக்காரராக இருந்தால் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் புகார் கொடுக்க முன்வர மாட்டார்கள். அந்த சமயம் நாங்களே போலீசில் புகார் கொடுத்து தவறு செய்தவர் மீது நடவடிக்கை எடுத்து இருக்கிறோம். ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 18 வயதுக்கு உள்பட்ட மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு பாதிக்கப்பட்டதாக 5 புகார்கள் வந்து உள்ளன.

செல்போனை தவிர்க்க வேண்டும்

சீனாபுரத்தில் உள்ள தனியார்் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் என்.விஸ்வநாதன்:-

பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள், தாங்கள் படிக்கும் இடங்களில், செல்போனை பயன்படுத்துவதை முதலில் நிறுத்த வேண்டும். தங்களுடைய தனிப்பட்ட தகவல்களை உடன் படிக்கும் தோழிகளுக்கு கூட தரக்கூடாது. மாலை 4 மணிக்குப் பிறகு, ஆசிரியர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் மாணவிகளிடம் நேரிலோ அல்லது செல்போன் மூலமோ பேசுவதை தவிர்ப்பது அவசியம். பாடம் சம்பந்தமாக கூட செல்போன் மூலம், ஆசிரியர்கள் மாணவிகளுடன் பேசக்கூடாது. பாடங்கள் சம்பந்தமாக கல்லூரிகளில், வாட்ஸ் ஆப் குரூப்களை உருவாக்கும்போது, மாணவிகளுக்கென தனி குரூப்பை உருவாக்க வேண்டும்.

கல்லூரி பஸ்களில் மாணவ-மாணவிகள் சேர்ந்து பயணிக்கும் போது, அவர்களை கண்காணிக்க, கண்காணிப்பாளர் ஒருவர் அந்த பஸ்சில் அவசியம் இருக்க வேண்டும். ஒவ்வொரு கல்லூரி பஸ்களிலும் கண்காணிப்பு கேமராக்களை கட்டாயம் பொருத்தி, மாணவ-மாணவிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். மாணவிகள் படிக்கும் வகுப்பறைகளில், கண்டிப்பாக சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்த வேண்டும். மறுநாள் கல்லூரி விடுமுறை என்பதை, முந்தைய நாளே மாணவியின் பெற்றோருக்கு, கல்லூரி நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவித்திட வேண்டும். எந்த ஒரு மாணவியாக இருந்தாலும், கல்லூரியில் இருந்து விடுப்பு எடுப்பது தொடர்பாக, அவர்களது பெற்றோர்களிடமிருந்து ஒப்புதல் கடிதம் பெற்று வர வேண்டும். இந்த நடவடிக்கைகளை, எந்தக் கல்லூரி நிர்வாகம் செயல்படுத்துகிறதோ அந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவிகள், பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாக மாட்டார்கள்.

கடுமையான நடவடிக்கை

சென்னிமலையை சேர்ந்த கல்லூரி பேராசிரியர் வி.மோகன்:-

பள்ளிக்கூடங்களிலேயே மாணவ-மாணவிகளுக்கு பாலியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதேபோல் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை கண்டிப்புடன் வளர்ப்பதுடன் யாரிடம், எப்படி பழக வேண்டும் என்பது குறித்து சொல்லி கொடுப்பது அவசியம். கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளுக்கு ஒழுக்கம் எவ்வாறு முக்கியம் என்பதை பெற்றோர்கள் மட்டுமின்றி பேராசிரியர்களும் நன்கு விளக்கமாறு கூறுங்கள்.

18 வயதுக்கு குறைவாக உள்ள சிறுமிகளிடம் அவர்கள் விருப்பத்தின் பேரிலேயே பாலியல் உறவு வைத்தால் அந்த செயல்களில் ஈடுபடும் ஆண்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோம் என தெரியாமலேயே தவறுகள் செய்கிறார்கள். அதனால் இது போன்ற பாலியல் தொல்லைகள் கொடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்