வரலாற்று சின்னங்கள் முறையாக பராமரிக்கப்படுமா?- பொதுமக்கள் எதிர்பார்ப்பு

வரலாற்று சின்னங்கள் முறையாக பராமரிக்கப்படுமா?- பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Update: 2023-02-07 21:45 GMT

பாரம்பரிய சின்னங்கள், வரலாற்று நிகழ்வுகள் நடந்த இடங்கள், மறக்க முடியாத சம்பவங்கள் நிகழ்ந்த இடங்கள், புரட்சிகள் தொடங்கிய இடம் என்று நம்மைச்சுற்றி ஏராளமான இடங்கள் வரலாற்றை தங்கள் பாத அடியில் புதைத்து வைத்துக்கொண்டு தங்களை மறைத்துக்கொள்கின்றன. காலம் சிலவற்றை மறைக்கச்செய்கிறது. சிலவற்றை மறக்கச்செய்கிறது. எதை மறைத்தாலும் தண்ணீருக்குள் மூழ்கும் நீர்குமிழி போன்று வரலாறுகள் வெளியே வந்தே தீரும். அப்படி வரலாற்று சின்னங்கள் தங்களை வெளிப்படுத்தும் போது அவற்றைப்பற்றி சரியாக தெரிந்து வரலாற்றை புரிந்து கொண்டு வருங்கால தலைமுறைக்கும் பாதுகாப்பாக கொண்டு சேர்ப்பது வேண்டும்.

தீரன் சின்னமலை

ஆங்கிலேயர் காலத்தில் அவர்களை விரட்டி அடித்த ஒரு மாவீரனாக தீரன்சின்னமலையும் அவருடன் இருந்த மாவீரர்களும் செய்தனர். அவர்களை கொலை செய்த ஆங்கிலேயப்படை, அவர்களைப்பற்றி வெளியே பேசக்கூடாது என்று வாய்ப்பூட்டு சட்டம் போட்டது. 200 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்று கொங்கு மண்டலமே போற்றும் தலைவர்களாக தீரன் சின்னமலை, குணாளன், பொல்லான் உள்ளிட்டவர்களை இந்த மண் போற்றுகிறது. வாய்ப்பூட்டு சட்டம் போடலாம், மனதை பூட்டும் சட்டம் போட முடியுமா, சின்னமலை கும்மி என்கிற கலைப்பாடல் வழியாக அந்த வரலாற்றை கொங்கு பெண்களும், அவர்களிடம் இருந்து புலவர் குழந்தையும் தீரனின் வரலாற்றை பாதுகாத்தனர். ஆனால், வெறும் பாடல் வழியாக மட்டுமின்றி, கல்வெட்டுகள், செப்பு பட்டையங்கள் மூலம் தீரனின் வரலாற்றை முழுமையாக வெளிக்கொண்டு வந்தவர் கல்வெட்டு அறிஞர் புலவர் செ.ராசு.

காலிங்கராயன்

தீரன் வரலாறு மட்டுமல்ல, கி.பி.1270-ம் ஆண்டு வெட்டத்தொடங்கி, 1282 வரை 12 ஆண்டுகள் வெட்டப்பட்ட காலிங்கராயன் வாய்க்கால், அணைக்கட்டு ஆகியவற்றின் வரலாற்றையும், அதை வெட்டிய மாபெரும் மனிதர், கொங்கு மண்ணின் ஒப்பற்ற தலைவர் காலிங்கராயனின் வரலாற்றையும் கல்வெட்டுகளின் உதவியுடன் புலவர் செ.ராசு வெளிக்கொண்டு வந்தார்.

தீரன் சின்னமலை கோட்டை கட்டி வாழ்ந்த ஓடாநிலையில் முயல் ஒன்று வேட்டைநாய்களை துரத்தியதாக ஒரு குறியீடு சொல்லப்படுகிறது. அங்கேதான் அவருக்கு மணிமண்டபம் எழுப்பப்பட்டு இருக்கிறது. காலிங்கராயன் அணைக்கட்டில் காலிங்கராயனுக்கு மணிமண்டபமும், முழு உருவச்சிலையும் எழுப்பப்பட்டு இருக்கிறது.

இவை மட்டும்தானா...

நொய்யல் கரை நாகரிகம்

ஈரோடு மாவட்டம் கொங்கு மண்டலத்தின் நடுநாயகமாக வீற்றிருக்கும் மண். கொங்கின் வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வுகள் இங்கே நடந்து இருக்கின்றன. தமிழ் மக்கள் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகம் மிக்கவர்களாக வாழ்ந்திருக்க வேண்டும் என்று ஆய்வாளர்களின் கருத்து. அதை வலுப்பெற செய்யும் வகையில் பல்வேறு ஓலைச்சுவடிகள், செப்பு பட்டையங்கள், கல்வெட்டுகள் என பலவற்றில் இலக்கியம் படைத்து வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். அப்படி முன்னோடியாக வாழ்ந்த ஒரு சமூகம் நமது ஈரோடு மாவட்டத்தின் நொய்யல் கரையில் வாழ்ந்திருக்கிறது. அவர்கள் பல்வேறு தொழில்கள் செய்து இருக்கிறார்கள். நொய்யல் கரை நாகரிகம் என்ற ஒரு வாழ்வியலை இன்று நமக்கு வெளிப்படுத்துகிறது கொடுமணல் அகழ்வாராய்ச்சி.

விஜயமங்கலத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சமணக்கோவில் பெரும் கோபுரத்துடன் காணப்படுகிறது. இங்கு கி.பி.11-ம் நூற்றாண்டில் வடநாட்டில் கங்க-சாளுக்கிய கூட்டுப்படைகளின் தலைவர் சாமுண்டராயன் என்பவரது தங்கை புள்ளப்பை என்பவர் வடக்கிருந்து தவம் ஏற்று உயிர்நீத்து உள்ளார் என்பதை அங்குள்ள கல்வெட்டு நமக்கு கூறுகிறது.

அணைகள்

கொடிவேரியில் மிகப்பழமையான, அறிவியல் தொழில் நுட்பங்கள் நிறைந்த அணைக்கட்டு இருக்கிறது. அதன் வரலாற்று சிறப்பு நமக்கு தெரிவதில்லை. நீர்வீழ்ச்சி இருக்கிறது. சுடச்சுட மீன் கிடைக்கும். ஒரு நாள் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்றே நாம் அங்கே குடும்பம் குடும்பமாக சென்று கொண்டிருக்கிறோம்.

பவானிசாகர் அணை, மிகப்பெரிய மண் அணை. சுமார் 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு வெறும் மண்ணால் கரை அமைக்கப்பட்டு இருக்கிறது. இங்கிருந்துதான், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களின் பெரும் பகுதி, கரூர் மாவட்டத்தின் ஒரு பகுதி என சுமார் 120 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. கீழ்பவானி வாய்க்கால் முழுமையும் மண்ணால் கரை அமைக்கப்பட்ட பெருமைக்கு உரியது. 70 ஆண்டுகள் கடந்தும் நமக்கு பாசனம் தருகிறது.

இவை எல்லாம் ஓரளவுக்கு நமக்கு தெரியும். ஆனால் வரலாற்றின் நிகழ்வுகளை மறைத்து வைத்திருக்கும் சின்னங்கள் பல நமது மாவட்டத்தின் பல பகுதிகளிலும் உள்ளன.

சங்ககாலம்

வரலாற்று முந்தைய காலத்திலேயே தொல் உயிரிகள் கிடைத்து உள்ளன. வெள்ளோடு, இச்சிப்பாளையம் பகுதிகளில் சுமார் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினங்களின் தொல் உயிரி அதாவது கல் மாறி கிடைத்து உள்ளது. பர்கூர் மலையில் கல் ஆயுதங்கள் கிடைத்து இருக்கின்றன. இது கி.மு. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்த தடயங்கள் நம் மண்ணில் உயிரின வாழ்க்கை தொன்று தொட்டே இருந்ததை அடையாளப்படுத்துகிறது.

கொடுமணல் மக்கள் சங்ககாலத்தை சார்ந்தவர்கள். கதிரம்பட்டி, சிவகிரி, பஞ்சலிங்கபுரம், பெரியசேமூர், மாணிக்கம்பாளையம், மூலக்கரை பகுதிகளிலும் இந்த காலக்கட்டத்தில் மக்கள் வசித்ததற்கான சான்றுகள் உள்ளன.

ஈருகாலூர், நம்பியூர், நல்லூரி, மலையம்பாளையம், புங்கம்பள்ளி, நெகமம், அத்தியூர், கடம்பூர், புளியம்பட்டி, பெருமுகை பகுதிகளும் அந்த காலத்திலேயே மக்கள் வசித்த பெருமைக்கு உரியன.

நடுகற்கள்

மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடுகற்கள் கிடைத்து உள்ளன. இவற்றில் 400 நடுகற்களில் வீரர்களின் பெயர், பெருமை குறிக்கப்பட்டு இருக்கிறது. மொடக்குறிச்சி பழமங்கலத்தில் கிடைத்த ஒரு கல்லில் பாடல் வடிவில் வரலாறு பொறிக்கப்பட்டு இருக்கிறது. இது கி.பி.10 நூற்றாண்டு அமைக்கப்பட்டதாகும். சின்னியம்பாளையம் சாத்தம்பூர் காவிரிக்கரை கோவிலில் காவிரியின் தோற்றம் குறித்த கல்வெட்டு பொறிக்கப்பட்டு இருக்கிறது. ஈரோடு காலிங்கராயன் வாய்க்கால் கரையில் உள்ள கோவிலில் குற்றவாளிகளுக்கு கொலை தண்டனை வழங்கும் கழுமரம் உள்ளது. காலிங்கராயன் கட்டிய அணையைப்போன்று ஈரோடு மரப்பாலம் பகுதியில் அவர் கட்டிய பாலமும் இன்றும் வலிமையாக உள்ளது.

இசைக்கல்வெட்டு

கி.பி.3-ம் நூற்றாண்டில் சந்திரகுப்தர் காலத்தில் விசாகச்சாரியார் என்பவரால் கொங்கு பகுதியில் சமண சமயம் வளர்ந்தது. மொத்தம் 72 இடங்களில் சமண கோவில்கள் கட்டப்பட்டன. இதில் ஈரோடு மாவட்டத்தில் தற்போது 5 கோவில்கள் உள்ளன. சீனாபுரத்தில் உள்ள ஆதிநாதர் கோவில். இங்கு பவணந்தி முனிவர் நன்னூல் இயற்றினார். பூந்துறையில் உள்ள பார்சுவநாதர் கோவில். இந்த கோவில் இப்போது வடஇந்திய ஜெயின் சமூகத்தினரால் கையகப்படுத்தப்பட்டு இருக்கிறது. தமிழ் அடையாளங்களாக இருந்த திகம்பர அடையாளம் அழிக்கப்பட்டு, வடநாட்டு அடையாளமான சுேதாம்பரம் நிலைநாட்டப்பட்டு இருக்கிறது. திங்களூர் புஷ்டதந்தர் கோவில், வெள்ளோடு ஆதிநாதர் கோவில், விஜயமங்கலம் சந்திரபிரதாபர் கோவில் ஆகியவை இன்னும் பழைய வடிவில் இருந்தாலும், இந்த கோவில்களுக்கு செல்லும் வழியை வடஇந்திய ஜெயின் சங்கம் ஆங்காங்கே வழிகாட்டிப்பலகையாக வைத்திருப்பதை காண முடிகிறது. தமிழ்நாட்டில் இருக்கும் இந்த பெருமைக்கு உரிய சின்னங்கள் நமக்கு தெரியவில்லை.

உலகில் எங்கும் இல்லாத வகையில் இசைக்கல்வெட்டு ஒன்று நமது ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள நாகமலையில் உள்ளது. சிறிய அளவிலான ஒரு குகையில் இந்த இசைக்கல்வெட்டு இருக்கிறது.

த தை தா தை த

தை தா தே தா தை

தா தே தை தே தா

தை தா தே தா தை

த தை தா தை த என்று தமிழில் குறிக்கப்பட்டு இருக்கிறது. நமக்கு இதன் தொன்மையும் தெரியவில்லை. பெருமையும் தெரியவில்லை. சமூக விரோத புகலிடமாக இந்த இடத்தை வைத்திருக்கும் நிலையில், இங்கும் ஜெயின் சங்க வழிகாட்டு பலகை அமைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இத்தனைக்கும் விஜயமங்கலம் சமணகோவில், அறச்சலூர் இசைக்கல்வெட்டு ஆகியவை மத்திய அரசின் தொல்லியல் துறையின் கீழ் இருக்கிறது.

வ.உ.சி.பூங்கா

பாரதியார் கடைசியாக சொற்பொழிவாற்றிய நூலகம், காந்தி ஈரோடு வந்ததற்கு அடையாளமாக அமைக்கப்பட்ட வ.உ.சி.பூங்கா காந்தி சிலை. தமிழ்நாட்டில் முதன் முறையாக குழாய் மூலம் குடிநீர் வழங்குவதற்காக கட்டப்பட்ட வ.உ.சி.பூங்கா கோட்டை வடிவ தண்ணீர் தொட்டி. சமூக நீதிக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த தந்தை பெரியார் பிறந்து வளர்ந்த வீடு. பேரறிஞர் அண்ணா வாழ்ந்த அதே இல்லம். கணித மேதை ராமானுஜர் பிற்நத இடம். திருப்பூர் குமரன் வாழ்ந்த வீடு. புராணம காலங்களுடன் தொடர்புடைய கொடுமுடி, பவானி, ஈரோடு கோவில்கள். ஈரோட்டின் பெயர் காரணமாக கூறப்படும் பெரும்பள்ளம், பிச்சைக்காரன் பள்ளம் ஓடைகள். 27 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட திம்பம் மலைப்பாதை. திப்புசுல்தான் காலத்தில் மலை வழியாக ஏற்படுத்தப்பட்ட சுல்தான் ரோடு என்று ஈரோடு மாவட்டத்தில் பாதுகாக்கப்பட வேண்டிய சின்னங்கள் ஏராளம் உள்ளன. இந்த பட்டியலில் வராமல் இன்னும் பல நூறு சின்னங்கள் இன்னும் அந்தந்த கிராம மக்களால் பாதுகாக்கப்பட்டு அல்லது மறைக்கப்பட்டு இருக்கலாம்.

அறச்சலூர் போரில் தீரன் சின்னமலை வென்றதற்காக அறச்சலூரில் அமைக்கப்பட்டு இருந்த வெற்றிக்கல் இப்போது இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிற்று.

ஈரோடு மாநகராட்சியின் வளர்ச்சியில் பங்கு கொண்ட பெரும் தலைவர்கள், பெரும் மக்கள் உருவாக்கிய ஒவவொன்றும் சிறப்புக்கு உரியன.

ஈரோடு வ.உ.சி. பூங்கா எத்தனை பெரிய தலைவர்கள் வந்து மக்களுடன் பேசிய வரலாற்று சிறப்பு மிக்கது.

ஈரோடு வ.உ.சி.பூங்கா மைதானம் மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் பேசிய பெருமைக்கு உரியது. இப்படி எல்லா பகுதிகளும் பெருமைக்கு உரியன. இவற்றை பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும்.

கல்வெட்டு அறிஞர் புலவர் செ.ராசு

இதுபற்றி ஈரோட்டில் பெரும் வரலாறுகளை வெளிக்கொண்டு வந்தவரும், கல்வெட்டு அறிஞருமான புலவர் செ.ராசு கூறியதாவது:-

இன்று இருக்கும் நினைவுச்சின்னங்கள் எல்லாம் நம் முன்னோர் உருவாக்கியவை. கலை, பண்பாடு, நாகரிகம், பண்பாடு ஆகிவற்றை நமக்கு கூறுபவை. பண்டைக்கால வரலாற்றை இவை நமக்கு கூறுகின்றன. நாம் பழைய வரலாற்றினை முழுமையாக தெரிந்து கொள்ள இவைதான் சான்றாக விளங்குகின்றன. இவற்றை அழியாமல் பாதுகாக்க வேண்டும். காலத்தின் கண்ணாடியான இந்த அடையாளங்கள் அழிந்தால் நம் வரலாறு அழியும். எதிர்கால வரலாறு உருவாக்கப்பட பண்டைய வரலாறு வழிகாட்டும்.

நடுகற்கள் நம் முன்உள்ள மிகப்பெரிய அடையாளங்களாகும். இவற்றை பாதுகாக்க வேண்டும். ஏற்கனவே விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டு இருந்த ஏராளமான நடுகற்கள் அழிக்கப்பட்டு விட்டன. மீதமிருக்கும் நடுகற்களை பாதுகாப்பது மிக அவசியமாகும். கொடுமணலில் அகழ்வராய்ச்சி நடைபெறுவது போல, அதே காலக்கட்டத்தில் மக்கள் வாழ்ந்த அடையாளங்கள் உள்ள அனைத்து பகுதிகளிலும் அகழாய்வுகள் நடத்தப்பட வேண்டும். இவைதான் நம் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தின் நாகரிக வளமையை கூறுவனவாக இருக்கும்.

இவ்வாறு கல்வெட்டு அறிஞர் புலவர் செ.ராசு கூறினார்.

காப்பாட்சியர் பா.ஜென்சி

ஈரோடு அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் பா.ஜென்சி கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் கிடைத்து உள்ள பண்டைய கால பொருட்களை வைத்துப்பார்த்தால் பன்னெடுங்காலமாகவே இந்த மண்ணில் மக்கள் பெருமையுடன், நாகரிகத்துடன், நல்ல தொழில் வளத்துடன் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக கொடுமணல் அகழ்வாய்வு பல ஆச்சரியங்களை நமக்கு தருகிறது. தாளவாடி, பர்கூர் மலைகளில் ஏராளமான வீர நடுகற்கள் கிடைத்து இருக்கின்றன. கோவில்கள் உள்ள பல கல்வெட்டுகள் வரலாற்றில் நடந்த சுவரஸ்யமான தகவல்களை தருகின்றன.

நமது கண் முன் ஓடும் காலிங்கராயன், கொடிவேரிஅணை மற்றும் வாய்க்கால்கள் சரித்திர சான்றுகளாக விளங்குகின்றன. இவற்றை நாம் பாதுகாப்பது பெருமை மட்டுமன்றி எதிர்கால சந்ததிக்கும் வாழ்கையை வழங்குவதாக இருக்கும்.

ஈரோடு அரசு அருங்காட்சியகம் ஈரோடு மாவட்டத்தின் வரலாற்றையும், புகழையும் வருங்கால சந்ததியினருக்கும் தெரிவிக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நூலகம் அமைந்திருக்கும் கட்டிடம் கூட 1927-ம் ஆண்டு வாசக சாலையாக கட்டப்பட்டது. காக்ஸ் ரீடிங் ரூம் என்ற பெயரில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் கூட மிகச்சிறந்த வரலாற்று சின்னமாகும். இங்கு இருக்கும் ஒரு மேஜை 200 ஆண்டுகள் பழமையானது. துருப்பிடிக்காத உலோகத்தால் ராசி சக்கரங்கள் அடங்கியது. 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாளி வரை இங்கு உள்ளது. பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாரம்பரியத்தை விளக்கும் ஒரு கல்விச்சாலையாக இந்த அருங்காட்சியம் உள்ளது. இதை பார்க்க மாணவ-மாணவிகளை ஆசிரிய-ஆசிரியைகள் ஊக்கப்படுத்த வேண்டும். இதன் மூலம் அவர்கள் நமது பெருமையை உணர்ந்து கொள்வதுடன், வரலாற்றின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்களாக வருவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

சக்தி பிரகாஷ்

வரலாற்று ஆர்வலர் மற்றும் ஆய்வாளர் சக்தி பிரகாஷ் கூறியதாவது:-

நமது பாரம்பரிய சின்னங்கள் பாதுகாக்கப்பட, அதுபற்றிய விழிப்புணர்வு அதிக அளவில் மக்களுக்கு வர வேண்டும். குறைந்த பட்சம் மாணவ-மாணவிகளுக்கு இதுபற்றி அறிவு ஊட்ட வேண்டும். அத்துடன் பாரம்பரிய சின்னங்களுக்கு இலகுவாக செல்லும் பாதைகளை உருவாக்க வேண்டும். மாணவ-மாணவிகளுக்கு கள ஆய்வு பயிற்சி அளிக்க வேண்டும்.கொடுமணல் குறித்து வெளிவரும் தகவல்கள் மகிழ்ச்சியை அளிப்பதாக இருக்கிறது என்று அதை தேடிச்சென்றால் அகழ்வாராய்ச்சி செய்யும் இடங்களை கண்டுபிடிப்பது மிகச்சிரமாக உள்ளது. இதுபோலத்தான் இசைக்கல்வெட்டு இருக்கும் இடத்துக்கு செல்ல முடியாது. நடுகற்கள், நெடுங்கற்கள் குறித்த தகவல்கள் கிடைத்து அவற்றை தேடிச்செல்லும்போது, இதனால் சிக்கல் வந்து விடுமோ என்று அந்த பகுதி மக்கள் அச்சத்தில் மறைத்து விடுகிறார்கள். பல இடங்களில் சேதப்படுத்தியும், உடைத்தும் அழித்து விடுகிறார்கள். காலிங்கராயனை பாதுகாக்க, காலிங்கராயன் கரை பயணத்தை உருவாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதை விவசாயிகள், பொதுமக்கள் முன்னெடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சி.அருண்குமார்வரலாற்று சின்னங்கள் முறையாக பராமரிக்கப்படுமா?- பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சமூக ஆர்வலர் சி.அருண்குமார் கூறியதாவது்-

தொல்லியல் துறையில் உள்ள நினைவுச்சின்னங்களை தமிழக அரசு மீட்டு, அவற்றை சரியாக பராமரிக்க வேண்டும். கேரளாவில் புராதான சின்னங்களை அந்த மாநில அரசு அழகாக பராமரிக்கிறது. சுற்றுலாதலமாக மாற்றி அதன் மூலம் வருவாய் ஈட்டுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் நமது வரலாற்று சின்னங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாத நிலை இருக்கிறது. பொதுமக்களுக்கு, குறிப்பாக மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் பகுதிகளுக்கு நேரடியாக அழைத்துச்சென்று காண்பிக்க வேண்டும். கொடுமணலில் ஒரு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். இதற்கு அந்த பகுதி மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சமீப காலமாக கல்வி என்பது பணம் சம்பாதிக்க தேவையான ஒன்றாக மாறிவிட்டதால், வரலாறு, புவியியல் படிப்பது மிகவும் குறைந்து விட்டது. வருங்காலத்தில் பள்ளிக்கூடங்களில் வரலாறு கற்பிக்க ஆசிரியர்கள் இல்லாத நிலையும் வரும். பள்ளி-கல்லூரிகளில் வரலாற்று துறைகள் நிறுத்தப்பட்டு வருகின்றன. வரலாறு படிப்பதை மீண்டும் பிரபலப்படுத்த வேண்டும். இதன் மூலம் வரலாற்று நிகழ்விடங்களை பார்க்கவும், அதுபற்றி அறிந்து கொள்ளவும் ஆர்வம் ஏற்படும். எனவே அனைத்து வகுப்புகளிலும் வரலாற்றை ஒரு கட்டாய பாடமாக கொண்டு வர வேண்டும் என்பதும் வரலாற்று ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்