காசிமேடு மீன் மார்க்கெட்டில் ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை - 4 பேர் கைது

காசிமேடு மீன் மார்க்கெட்டில் ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-22 07:43 GMT

சென்னை எர்ணாவூர் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் சூர்யா என்ற கேரளா சூர்யா (வயது 22). ரவுடியான இவர் மீது 2021-ம் ஆண்டு இவரது நண்பரான சுடர்மணியை அடித்துக்கொலை செய்தது உள்பட கொலை, அடிதடி என 7 வழக்குகள் உள்ளது. தற்போது மீன்பிடி தொழில் செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் பிடிக்க செல்வதற்காக சூர்யா மீன் ஏலம் விடும் இடத்தில் நடந்து சென்றார். அப்போது கையில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் 4 பேர் கொண்ட கும்பல் சூர்யாவை சுற்றி வளைத்தது.

இதனால் அவர்களிடம் இருந்து தப்பிக்க சூர்யா அங்கிருந்து ஓடினார். ஆனால் அந்த கும்பல் அவரை விடாமல் ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் தலை மற்றும் கழுத்தில் பலத்த வெட்டு காயம் அடைந்த சூர்யா, ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார்.

இதை பார்த்த அருகில் இருந்த மீனவர்கள், காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சூர்யாவை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சூர்யா பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக காசிமேடு பவர் குப்பத்தைச் சேர்ந்த மீனவர் சந்தோஷம் (30), ராயபுரம் கிழக்கு மாதா கோவிலைச் சேர்ந்த மீனவர் நிஷாந்த் (28), எண்ணூர் நேதாஜி நகரை சேர்ந்த குணசேகரன் (20), திருவொற்றியூர் குப்பத்தைச் சேர்ந்த லோகேஷ் (20) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

விசாரணையில் கொைலயான சூர்யாவும், அவருடைய நண்பரான முகேஷ் என்பவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலையாளிகள் 4 பேரையும் அடித்து உதைத்தனர். அதற்கு பழி வாங்கவே 4 பேரும் சேர்ந்து சூர்யாவை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. கைதான 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்