கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி கோவிலில் கொடியேற்றம்

பங்குனி திருவிழாவை முன்னிட்டு கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி கோவிலில் நேற்று கொடியேற்றம் நடைபெற்றது.

Update: 2023-03-28 18:55 GMT

பங்குனி திருவிழா

கரூரில் பிரசித்தி பெற்ற அலங்காரவல்லி, சவுந்திரநாயகி உடனாகிய கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டு பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனையொட்டி அலங்காரவல்லி, சவுந்திரநாயகி உடனாகிய பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கு பால், பன்னீர், மஞ்சள், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம் உள்பட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து சுவாமிகளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் கோவிலில் உள்ள கொடி மரத்திற்கு பூஜை செய்யப்பட்டு, மேளதாளங்கள் முழங்க காலை 11.15 மணியளவில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.

தேரோட்டம்

தொடர்ந்து பஞ்சமூர்த்திகளுக்கும், கொடிகம்பத்திற்கும் சிறப்பு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் கரூர், திருமாநிலையூர், தாந்தோணிமலை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மாலை 6.30 மணியளவில் சூர்ய பிரபையில் சாமி திருவீதியுலா நடைபெற்றது. தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் நந்தி வாகனம், அன்ன வாகனம், பூத வாகனம், பூதகி வாகனம், ரிஷப வாகனம், திருக்கயிலாய வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. ஏப்ரல் மாதம் 3-ந் தேதி காலை 9.20 மணி முதல் 10.20 மணிக்குள் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற ஏப்ரல் மாதம் 5-ந் தேதி நடைபெற உள்ளது. அன்று காலை 5.45 மணி முதல் 6.30 மணிக்குள் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளி, திருத்தேர் வடம் பிடித்தல் விழா நடக்கிறது. 6-ந் தேதி நடராஜ மூர்த்திக்கு தீர்த்தவாரியும், 7-ந் தேதி விடையாற்றி உற்சவமும், 8-ந் தேதி ஊஞ்சல் உற்சவமும் நடைபெற உள்ளது. விழா நாட்களில் சொற்பொழிவும், இசைநிகழ்ச்சியும் நால்வர் அரங்கில் நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்