கலைஞருக்கு எத்தனை சிலைகள் அமைத்தாலும் ஈடாகாது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

கலைஞருக்கு எத்தனை சிலைகள் அமைத்தாலும் ஈடாகாது என்றும், கோடிக்கணக்கான தமிழ் மக்களின் நெஞ்சங்களில் என்றைக்கும் கலைஞர் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Update: 2022-05-28 14:40 GMT

சென்னை,

தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு நிகழ்ச்சி சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் நடந்தது. அதனைத்தொடர்ந்து அதற்கு அருகில் உள்ள கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

இன்று எழுப்பப்பட்டிருக்கும் சிலைக்கு இருக்கும் சிறப்பு என்னவென்றால், தந்தை பெரியாருக்கும், பேரறிஞர் அண்ணாவுக்கும் இடையிலே நம்முடைய முத்தமிழறிஞர் சிலை அமைந்திருக்கிறது. இது மிக மிக பொருத்தமாக அமைந்துள்ளது

இத்தகைய சிறப்புகள் கொண்ட விழாவுக்கு மகிழவைப்பதைபோல, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வருகைதந்து, கலைஞர் சிலையை திறந்து வைத்திருக்கிறார். நம்முடைய நட்புக்குரிய இனிய நண்பராகதான் துணை ஜனாதிபதி எப்போதும் இருந்து வருகிறார்

கலைஞர் சிலையை திறந்துவைக்க யாரை அழைக்கலாம்? என்று நாங்கள் சிந்தித்த நேரத்தில், துணை ஜனாதிபதி முகம்தான் எங்கள் நெஞ்சிலே தோன்றியது. அவரை நேரில் சந்தித்து கேட்டநேரத்தில் மனப்பூர்வமாக அவர் ஒப்புக்கொண்டார். துணைஜனாதிபதி வெங்கையா நாயுடு, மிக சிறந்த நாடாளுமன்ற ஜனநாயகவாதி என்று பெயர் எடுத்தவர். மாநிலங்களவையை கொந்தளிப்பான சூழ்நிலையிலும் திறம்பட கையாண்டவர்.

எனவேதான் கலைஞர் சட்டமன்றத்தில் 60 ஆண்டுகள் பணியாற்றியதற்கு, எத்தகைய திறமைவேண்டும் என்பது துணைஜனாதிபதிக்கு தெரியும். இன்று தலைவர் கலைஞரின் சிலையை அவர் திறப்பது, மிக மிக சாலப்பொருத்தமாக அமைந்துள்ளது. துணை ஜனாதிபதி என்ற மிக உயர்ந்த பதவியில் இருக்கும்போது, நம்முடைய தலைவர் சிலையை திறந்து வைத்திருப்பது இன்னும் பெருமைக்குரிய நிகழ்வாக நடந்துகொண்டிருக்கிறது.

எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் அந்ததுறையில் கோலோச்சியவர் கலைஞர். தமிழ் சமுதாயத்துக்காக உழைத்த எத்தனையோ பெருமக்களுக்கு சிலைகள், நினைவகங்கள், மணிமண்டபங்கள் அமைத்தவர் கலைஞர். அவருக்கு எத்தனை சிலைகள் அமைத்தாலும் ஈடாகாது. அண்ணாசாலையில் பெரியாருக்கும், அண்ணாவுக்கும் மத்தியில் அமைந்திருக்கும் இந்த சிலை ஈடுஇணையில்லாதது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்