எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் கருணாநிதி நூற்றாண்டு புகைப்பட கண்காட்சி - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்துவைத்தார்

சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் கருணாநிதி நூற்றாண்டு புகைப்பட கண்காட்சியை, அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்.

Update: 2023-09-06 09:28 GMT

முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக அரசு அருங்காட்சியகங்கள் துறை சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் கருணாநிதி குறித்த சிறப்பு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கண்காட்சியை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று தொடங்கி வைத்தார்.

இதில் கருணாநிதியின் அரசியல், திரைத்துறை, பத்திரிகையாளர் என பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் அவர் பெற்ற நினைவுப்பரிசுகள், விருதுகள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக முதல்-அமைச்சராக இருந்தபோது கை ரிக்ஷா நடைமுறையை கருணாநிதி ஒழித்து கட்டினார். அதன் நினைவாக அந்த கை ரிக்ஷா காட்சி பொருளாக கண்காட்சியில் வைக்கப்பட்டு உள்ளது.

இந்த கண்காட்சியில் உள்ள கருணாநிதி குறித்த புகைப்படங்களை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பார்வையிட்டார். காட்சிக்கு இருந்த கை ரிக்ஷாவையும் ஆர்வமுடன் பார்வையிட்டார். மேலும் கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு பள்ளி மாணவர்களிடையே நடத்தப்பட்ட ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் கலந்துகொண்ட மாணவ-மாணவிகளுக்கு அவர் பரிசுகள் வழங்கினார். இந்த கண்காட்சியை பொதுமக்களும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

அதனைத்தொடர்ந்து அமைச்சர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கருணாநிதி, தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக இருந்தபோது, என்னென்ன திட்டங்கள் கொண்டு வந்தார்? என்பதை இன்றைய இளைஞர் சமுதாயம் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் புகைப்பட கண்காட்சி அமைந்துள்ளது. இந்தியாவில் இன்றும் பல்வேறு மாநிலங்களில் நடைமுறையில் இருக்கும் கை ரிக்ஷாவை கருணாநிதி ஒழித்து கட்டினார். அதன் பின்னர் ஆட்டோ வந்தது.

கருணாநிதி கொண்டுவந்த உழவர் சந்தை, பெரியார் நினைவு சமத்துவபுரம் போன்றவை இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. அந்த திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறார். கண்காட்சியை இன்னும் ஒரு மாதம் மக்கள் பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் கண்காட்சி நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்