இறைபணிக்காக வழங்கிய ஆளவந்தார் நிலத்தில் கருணாநிதி நூற்றாண்டு நினைவு பன்னாட்டு அரங்கம் அமைப்பதா? ராமதாஸ் கண்டனம்

ஆளவந்தாரின் நிலங்களை காக்க வேண்டிய அரசே, அவற்றை பறிக்கத் துடிக்கக்கூடாது என்றும், ஆளவந்தார் நிலத்தில் கருணாநிதி நூற்றாண்டு நினைவு பன்னாட்டு அரங்கம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Update: 2023-09-22 18:37 GMT

சென்னை,

தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட கருணாநிதி நூற்றாண்டு நினைவு பன்னாட்டு அரங்கம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு கிராமத்தில் கட்டப்பட இருப்பதாகவும், இதில், பெரும்பகுதி ஆயிரம் காணி ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் என்றும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது. இது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும். இது உண்மையாக இருந்தால் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

கருணாநிதி நூற்றாண்டு நினைவு பன்னாட்டு அரங்கம் அமைக்க சென்னையிலும், சென்னைக்கு வெளியிலும் அரசுக்கு சொந்தமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன.

அவற்றில் பன்னாட்டு அரங்கத்தை கட்டுவதை விடுத்து ஆயிரம்காணி ஆளவந்தார் அறக்கட்டளை நிலத்தில் கட்டக்கூடாது. வன்னிய குலத்தில் பிறந்த ஆளவந்தார் நாயகர், அவரது கடுமையான உழைப்பால் சேர்த்த 1550 ஏக்கர் நிலங்களை இறைப்பணிக்காக வழங்கினார்.

கைவிட வேண்டும்

அவரது பெயரில் செயல்பட்டு வரும் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமாக இப்போது 1054 ஏக்கர் நிலம் உள்ளது. கருணாநிதி நூற்றாண்டு பன்னாட்டு அரங்கம் என்பது இறைப்பணியோ, கல்விப் பணியோ சார்ந்தது அல்ல. அதற்காக ஆளவந்தார் நிலங்களை ஒரு போதும் பயன்படுத்தக்கூடாது. ஆளவந்தாரின் நிலங்களை காக்க வேண்டிய அரசே, அவற்றை பறிக்கத் துடிக்கக்கூடாது.

எனவே, முட்டுக்காடு கிராமத்தில் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தில் கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்னாட்டு அரங்கம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிடவேண்டும். எந்த காலத்திலும், எதற்காகவும் ஆளவந்தாரின் நிலங்கள், அவரது விருப்பத்தை நிறைவேற்றுவதை தவிர்த்து வேறு எந்தப்பணிகளுக்கும் வழங்கப்படாது என்பதை அரசு பொது அறிவிப்பாக வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்