கருணாநிதி நூற்றாண்டு விழாவில் 7 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்: "ஊழலும், மதவாதமும்தான் மத்திய அரசின் சாதனைகள்" காளையார்கோவிலில் ஆ.ராசா பேச்சு
“ஊழலும், மதவாதமும்தான் மத்திய அரசின் சாதனைகள்” என காளையார்கோவிலில் ஆ.ராசா பேசினார்.
காளையார்கோவில்,
தேர்தல் வாக்குறுதிகள்
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம், 7000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. காளையார்கோவில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார்.
நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா, கூட்டுறவுத்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கே.ஆர்.பெரியகருப்பன், மாநில இலக்கிய அணி தலைவர் முன்னாள் அமைச்சர் தென்னவன், மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் பேசும்போது, பெரியாரின் கொள்கைகளை சட்டமாக்கி அதனை நடைமுறைப்படுத்தியவர்கள் அண்ணா, கருணாநிதி. அவர்களின் வழியில் மு.க.ஸ்டாலினும் திறம்பட ஆட்சி செய்துவருகிறார். தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளை 85 சதவீதம் நிறைவேற்றியுள்ளார். ஆனால் மத்திய பா.ஜ.க. அரசு வாக்குறுதிகளை அள்ளித்தந்து, மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது. மோடி அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்து சர்வாதிகாரியாக மாற முயற்சிக்கிறார்", என்றார்.
மோடி, அமித்ஷா சிறை
பொதுக்கூட்டத்தில் ஆ.ராசா பேசியதாவது:-
பெண்களுக்கான இட ஒதுக்கீடு, சொத்துரிமை சட்டத்தை கொண்டு வந்தவர் கருணாநிதி. 50 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரத்தை கொண்டு சென்றவர். முன்னாள் பிரதமர் நேரு, அணிசேரா நாடுகளின் தலைவராக விளங்கிய காலத்தில் இருந்தே இந்தியா பாலஸ்தீனத்தை ஆதரித்தது. தற்போது மோடி இஸ்ரேலை ஆதரிக்கிறார்.
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் பிரதமர் மோடி, அமித்ஷாவின் ஊழலை அம்பலப்படுத்துவோம். ஒரு பக்கம் ஊழல், மறுபக்கம் மதவாதம். இதுதான் மோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனைகள்.
இவ்வாறு அவர் பேசினார். இதை தொடர்ந்து தையல் எந்திரம், கல்வி உதவித்தொகை என 7000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பங்கேற்றவர்கள்
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் கணேசன், துணை செயலாளர்கள் சேங்கை மாறன், மணிமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், காரைக்குடி நகராட்சி தலைவர் முத்துத்துரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார், திருப்பத்தூர் பேரூராட்சி தலைவர் கோகிலா ராணி நாராயணன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார், அயலக அணி அமைப்பாளர் அஜித்குமார், மகளிர் அணி அமைப்பாளர் பவானி கணேசன், மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் ஹேமலதா செந்தில், மாநில பொதுக்குழு உறுப்பினர் கரு.அசோகன், மாவட்ட கவுன்சிலர் ஸ்டெல்லா, தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் நெப்போலியன், அயலக அணி துணை அமைப்பாளர் காட்டுப்புலி சவுந்தர ராஜன், இலக்கிய அணி பேரவை துணை அமைப்பாளர் குருபோஸ், மகளிர் அணி துணை அமைப்பாளர் கலாராணி ராஜா, ஒன்றிய செயலாளர்கள் கென்னடி, யோக கிருஷ்ணகுமார், துணை செயலாளர்கள் வனிதா கண்ணதாசன், முத்து, மாவட்ட பிரதிநிதிகள் குழந்தைசாமி, கந்தசாமி, ஜான் சந்தியாகு, முன்னாள் சேர்மன் அருள்செல்வி அரசு, ஒன்றிய பொருளாளர் முருகேசன், மகளிர் அணி அமைப்பாளர் எஸ்தர் மேரி, தமிழ் பிரியா வேங்கை பிரபாகரன், ஒன்றிய பிரதிநிதி அருண், மாணவரணி அமைப்பாளர் சதீஷ், தகவல் தொழில்நுட்ப அணி தினேஷ் அரசு உள்பட பலர் பங்கேற்றனர். கிளை செயலாளர் அரங்கநாதன் நன்றி கூறினார்.