காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைக்கிறது-ஜோதிமணி எம்.பி. குற்றச்சாட்டு
காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைப்பதாக ஜோதிமணி எம்.பி. குற்றம் சாட்டினார்.;
கரூரில் ஜோதிமணி எம்.பி. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு அநீதியை இழைக்கிறது. அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்களும் (பா.ஜனதா தவிர) மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து, தமிழகத்திற்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்படுகிறது. தமிழகத்திற்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் கேட்கிறோம். ஆனால் காவிரி மேலாண்மை ஆணையத்தில் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர்தான் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டும் என மத்திய அரசு கூறுகிறது. இதுவே தவறானது. 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் என்பது நமது சலுகை அல்ல, தமிழகத்தின் உரிமை. கடைமடை வரை தண்ணீர் செல்ல வேண்டும். கர்நாடக அரசு சிறிய அணைகள் வைத்து, அதில் நீரை சேமித்து வைக்கிறார்கள். அதனை மத்திய அரசு கணக்கில் எடுத்து கொள்ளவில்லை. அதனையும் மத்திய அரசு கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும்.
காவிரி மேலாண்மை ஆணையத்திடமும், உச்சநீதிமன்றத்திடமும் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்கு தமிழக முதல்-அமைச்சர் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். காவிரி பிரச்சினையில் மத்திய அரசு நடுநிலையாக இருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு துரதிருஷ்டவசமாக கர்நாடகாவில் இருக்கின்ற அரசியலையும், வாக்கு வங்கியையும் தான் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு அநீதி இழைக்கப்படுகிறது என்பதை அவர்கள் பார்க்கவில்லை. ஆனால் மிக நிச்சயமாக உச்சநீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும். தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக்கூடாது என்ற போராட்டத்தை பா.ஜனதா வலுவாக, கர்நாடகத்தில் நடத்தி கொண்டிருக்கிறது. பா.ஜனதா தமிழகத்திற்கு எதிரான போக்கை கைவிட வேண்டும். கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோருக்கு, தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பாக கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். கர்நாடகாவில் காங்கிரஸ் அரசாக இருந்தாலும் நெற்றிக்கண் திறப்பின் குற்றம் குற்றமே. தமிழ்நாடு சகோதர மாநிலம், தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுக்க வேண்டும் என்ற கருத்தை கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார். ஆனால் பா.ஜனதா போராட்டம் நடத்தியதையடுத்து, காங்கிரஸ் அரசு பின்வாங்குகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.