கர்நாடக தேர்தலில் பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு மரணஅடி - நாராயணசாமி

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதன் மூலம் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு மக்கள் மரண அடி கொடுத்துள்ளனர் என்று புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.;

Update:2023-05-13 22:38 IST

காங்கிரசார் கொண்டாட்டம்

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றியை பெற்றுள்ளது. இதனால் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்து வெற்றியை கொண்டாடி வருகிறார்கள். புதுச்சேரியிலும் காங்கிரஸ் கட்சியினர் வெற்றியை கொண்டாடினார்கள். புதுவை வைசியாள் வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாநில தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தலைமையில் பட்டடாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ந்தனர். தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக சென்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

அப்போது முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

அதிகார பலம்

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் இணைந்து ஆட்சியை அமைத்தது. 1½ ஆண்டுகளில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் தங்களது அதிகார பலம், பணபலத்தை கொண்டு பா.ஜ.க. ஆட்சியை அமைத்தனர். இந்த ஆட்சி அமைந்தது முதல் கர்நாடக மாநில மக்கள் பல இன்னல்களை அனுபவித்துள்ளனர். தேர்தல் நேரத்தில் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக பாடுபட்டு இந்த வெற்றியை பெற்றுள்ளனர்.

மரண அடி

பிரதமர் மோடி பல்வேறு கூட்டங்களில் பேசியும், ஊர்வலம் நடத்திய நிலையிலும் கர்நாடக மாநில மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு தெளிவான வெற்றியை கொடுத்து அரியணையில் அமர்த்தியுள்ளனர். இந்த தேர்தல் வெற்றியானது, நடைபெற உள்ள மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநில தேர்தல்களுக்கு முன்னோட்டமாகும்.

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் ஆட்சியை பிடிக்கும். ராகுல்காந்தி பிரதமராக வாய்ப்பும் உருவாகி உள்ளது. கர்நாடக தேர்தல் மூலம் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு மக்கள் மரண அடி கொடுத்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்