காரைக்குடி- சென்னை கம்பன் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும்

திருத்துறைப்பூண்டி வழியாக காரைக்குடி- சென்னை கம்பன் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2023-06-17 18:45 GMT

கம்பன் எக்ஸ்பிரஸ்

திருவாரூர் மாவட்ட ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தலைவர் வக்கீல் நாகராஜன், மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆகியோர் ரெயில்வே துறைக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

திருத்துறைப்பூண்டி வழியே இயக்கப்படும் காரைக்குடி -சென்னை இரவு நேர ரெயில் 120 ஆண்டுகள் பாரம்பரியமானது. ஆரம்ப காலத்தில் காரைக்குடி வரை சென்று பின்னர் போட்டில் ராமேஸ்வரம் தீவுக்கு தபால்கள் அனுப்பப்பட்டதால் போட்மெயில் என அழைக்கப்பட்டது.

பின்னர் கம்பம் எக்ஸ்பிரஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்பட்டு வந்தது. தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளும் அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டது. ஆனால் காரைக்குடி -சென்னை விரைவு ரெயில் பாதை மட்டும் அகல ரெயில் பாதையாக மாற்ற படாததால் 2012-ம் ஆண்டு மீட்டர் கேஜ் ரெயிலானது நிறுத்தப்பட்டது.

அகல ரெயில் பாதை

திருவாரூர்-காரைக்குடி ரெயில் பாதை ரூ.1500 கோடியில் அகல ரெயில் பாதையாக மாற்றும் பணி தொடங்கியது. பின்னர் 2018-ம் ஆண்டு அந்த பணி முடிவடைந்தது. ஆனால் அதன் பிறகு அந்த இரவு நேர கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படவில்லை.

இந்த பாதை காரைக்குடி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மேலும் கேரளா, கன்னியாகுமரி போன்ற முக்கிய வழித்தடங்களை இணைக்கும் பாதையாகவும் உள்ளது.

மீண்டும் இயக்க வேண்டும்

எனவே தென்னக ரெயில்வே மண்டலம் உடனடியாக சென்னை -காரைக்குடி அகல ரெயில் பாதையில் இரவு நேர கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்