காரைக்கால்: ஜெயிலர் படம் பார்த்துவிட்டு வீடு திரும்பும்போது பைக் மீது கார் மோதி விபத்து - 3 பேர் பலி

காரைக்காலில் ஜெயிலர் படம் பார்த்துவிட்டு வீடு திரும்பும்போது பைக் மீது கார் மோதி விபத்தில் 3 பேர் பலியாகினர்.

Update: 2023-08-13 09:30 GMT

காரைக்கால்,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நகரை சேர்ந்தவர்கள் அருண், சரவணன், கணபதி (வயது 25), வாசிம் முசரப் (22). இவர்கள் காரைக்கால் அடுத்த தமிழகபகுதியான மயிலாடுதுறைக்கு காரில் ஜெயிலர் திரைப்படம் பார்ப்பதற்காக சென்றனர். திரைப்படம் பார்த்துவிட்டு காரில் காரைக்காலில் உள்ள அவர்களது வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

இன்று காலை காரைக்கால் கோட்டுச்சேரி அருகே கார் வந்த போது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. மோதிய வேகத்தில் அருகில் இருந்த வாய்காலில் தலைக்குப்புற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் வந்த கணபதி, வாசிம் முசரப்,மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதைபார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து காரைக்கால் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் காரில் சிக்கிகொண்டு படுகாயம் அடைந்த அருண், சரவணனை மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்தில் உயிரிழந்த கணபதி, வாசிம் முசரப், செல்வம் ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படம் பார்த்துவிட்டு வீடு திரும்பும்போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்