கனியாமூரில் கலவரம் நடந்த சக்தி மெட்ரிக் பள்ளியில் 3-வது நாளாக தடயவியல் நிபுணர்கள் ஆய்வு
கனியாமூரில் கலவரம் நடந்த சக்தி மெட்ரிக் பள்ளியில் நேற்று 3-வது நாளாக தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.
சின்னசேலம்,
சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் படித்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி மரணத்துக்கு நீதிகேட்டுகடந்த 17-ந்தேதி நடந்த போராட்டத்தில் பள்ளி வளாகத்தில் பெரும் கலவரம் வெடித்தது. இதில் பள்ளி மற்றும் அங்கிருந்த பஸ்கள், வாகனங்கள் மற்றும் பாதுகாப்புக்கு வந்திருந்த போலீஸ் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டது.
மாணவி மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரும், கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினரும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
3-வது நாளாக தடயங்கள் சேகரிப்பு
இந்த நிலையில், தடயவியல் துணை இயக்குனர் சண்முகம், கைரேகை நிபுணர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் தொடர்ந்து நேற்று 3-வது நாளாக கலவரம் நடந்த இடத்தில் தடயங்கள் மற்றும் கைரேகைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆய்வின் போது, கலவரக்காரர்கள் அந்த பகுதியில் விட்டு சென்ற கைக்குட்டை, செருப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கைப்பற்றினர். பள்ளி வளாகம் முழுவதையும் போலீசார் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, தடயங்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பாதுகாப்பு நடவடிக்கை
பள்ளியின் உள்ளே வேறு யாரையும் அனுமதிக்காத வகையில், நுழைவு வாயில் முன்பு தடு்ப்புகள் அமைத்து, கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையிலான 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பள்ளிக்கு விசாரணைக்காக வரும் கல்வித்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் பற்றிய விவரங்களை வருகை பதிவேட்டில் பதிவு செய்து கையொப்பம் பெற்ற பின்னரே அவர்களும் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.