காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடை பெற்றது,

Update: 2023-06-06 22:23 GMT

காஞ்சீபுரம்,

அத்திவரதர் புகழ்பெற்ற காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அன்று முதல் நாள்தோறும் காலை மற்றும் மாலை இரு வேளைகளில் வரதராஜ பெருமாள் உற்சவர் ஸ்ரீதேவி பூதேவியுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

அந்த வகையில் விழாவின் முக்கிய நிகழ்வாக 3-ம்நாள் கருட சேவை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

தேரோட்டம்

மற்றொரு முக்கிய நிகழ்வாக 7- வது நாளான நேற்று காலை தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையிலேயே வரதராஜ பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு மலர் அலங்காரத்தில் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து காஞ்சீபுரம் காந்திரோடு தேரடிக்கு எழுந்தருளினார்.

அங்கு தயார்நிலையில் இருந்த அலங்கரிக்கப்பட்டதேரில் வரதராஜ பெருமாள் எழுந்தருளினார். அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் ஓதி கற்பூர தீபாராதனைகள் காண்பித்தனர். அப்போது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா! கோவிந்தா! வரதா! வரதா! என்று கோஷமிட்டு வணங்கி வழிபட்டனர். மேள தாளங்கள், தாரை தப்பட்டைகள் முழங்க சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி. எழிலரசன், காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம். சுதாகர் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

சாமி தரிசனம்

தேர் காந்தி சாலை, மூங்கில் மண்டபம், காமராஜர் சாலை, கச்சபேஸ்வரர் கோவில், சங்கர மடம், பூக்கடை சத்திரம், உள்பட மாநகரின் முக்கிய வீதிகள் வழியாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச்செல்ல தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

தேரோட்டத்தின்போது, வேத பாராயண கோஷ்டியினர் வேத பாராயணம் பாடியவாறு சென்றனர். தேரோட்டத்தை காண, தமிழ்நாடு, ஆந்திரா கர்நாடகா கேரளா மாநிலங்களில் இருந்தும் காஞ்சீபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திரும்பும் திசையெங்கும் பக்தர்களின் கூட்டமாக இருந்தது.

காஞ்சீபுரத்தை சேர்ந்த பக்தர்கள் மற்றும் வணிக நிறுவனத்தினர் சார்பில் தேரோட்டத்தை காண வரும் பக்தர்களுக்கு மோர், பழரசம், வெண் பொங்கல், தயிர் சாதம், புளி சாதம், லட்டு, கேசரி, சர்க்கரை பொங்கல் ஆகியவை வழிநெடுகிலும் வழங்கப்பட்டது. நாளை(வியாழக்கிழமை) தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. 9-ந்தேதி பெருமாள் வெட்டிவேர் சப்பரத்தில் வீதியுலா வருவதுடன் விழா நிறைவு பெறுகிறது.

தேரோட்டத்தை பார்க்க வந்த பக்தர் மயங்கி விழுந்து சாவு

காஞ்சீபுரம் கோட்ராம்பாளையம் நாகலூத்து தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 60). சலவைத்தொழிலாளி. நேற்று அதிகாலை தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் தேரோட்டத்தை பார்க்க ஜவுளிக்கடை சத்திரம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறி மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி அவரை ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு ராமமூர்த்தியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தேரோட்டத்தை பார்க்க சென்ற பக்தர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் காஞ்சீபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்