காஞ்சீபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் தேர் திருவிழா

காஞ்சீபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் தேர் திருவிழா நடந்தது.

Update: 2023-05-23 09:21 GMT

கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் வைகுந்தவல்லி சமேத வைகுண்ட பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா் கடந்த மே மாதம் 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி நாள் தோறும் காலை, மாலை, என இரு வேளையும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். வைகாசி மாத பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை உற்சவம் கடந்த மே மாதம் 18-ந்தேதி நடைபெற்றது.

தொடர்ந்து பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான நேற்று தேர் திருவிழா நடைபெற்றது. வைகுண்டநாதர் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ரோஜா, மல்லி, மனோரஞ்சிதம் உள்ளிட்ட பல்வேறு வண்ண மலர்கள் மற்றும் நகைகளால் அலங்கரிக்கப்பட்டு கோவில் அலங்காரமண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். சாமிக்கு வேத மந்திரங்கள் ஓத சிறப்பு தீபாராதனைகளை அர்ச்சகர்கள் காட்டினர்.

அப்போது திரண்டு இருந்த பக்தர்கள் கோவிந்தா! கோவிந்தா! என்ற பக்தி கோஷங்களை எழுப்பினர். தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். பஜனை குழுவினர் மற்றும் கோஷ்டியினர் வேத பாராயணங்கள் பாட நான்கு ராஜ வீதியில் வைகுண்ட பெருமாள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்களுக்கு ஆங்காங்கே நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது.

தேர் திருவிழாவை காண காஞ்சீபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் நடராஜன், கோவில் மேலாளர் சுரேஷ் மற்றும் பணியாளர்கள், அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்