கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கு: அடுத்த மாதம் 22ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கு விசாரணையை விழுப்புரம் நீதிமன்றம் அடுத்த மாதம் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Update: 2023-07-19 10:53 GMT

விழுப்புரம்,

கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (வயது 17). கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார்ப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த இவர், கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் 13-ந்தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இந்த நிலையில் ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்பினர் நடத்திய போராட்டம் பெரிய கலவரமாக வெடித்து வன்முறையில் முடிந்தது. மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து அவரது தாய் செல்வி, சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரைக் கைது செய்தனர்.

பின்னர் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதனிடையே கலவரத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து மாணவி ஸ்ரீமதி மர்ம மரண வழக்கில் சுமார் 1,200 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தலைமையிலான விசாரணை அதிகாரிகள் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கிலிருந்து 2 ஆசிரியர்களை நீக்கி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முதலாவது நபர் கீர்த்திகா, 2-வது நபர் ஹரிப்பிரியா வழக்கிலிருந்து நீக்கப்பட்டனர். சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஆட்சேபனை இருந்தால் கடந்த மாதம் 5-ந் தேதி நேரில் ஆஜராகும்படி ஸ்ரீமதியின் தாய் செல்விக்கு விழுப்புரம் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.

இதற்காக அவர் கடந்த 5-ந் தேதி விழுப்புரம் கோர்ட்டில் ஆஜராகி, இவ்வழக்கில் இருந்து ஆசிரியைகள் கீர்த்திகா, ஹரிப்பிரியா ஆகிய இருவரையும் விடுவித்ததற்கு ஆட்சேபனை தெரிவிக்க இருப்பதாகவும், அதற்காக குற்றப்பத்திரிகை நகல் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்கள், சாட்சியங்களின் பதிவு விவரம் ஆகியவற்றை தங்களிடம் ஒப்படைக்குமாறு மனுதாக்கல் செய்தார். அதன்பேரில் அவருக்கு குற்றப்பத்திரிகை நகல் மற்றும் ஆவணங்கள் வழங்கப்பட்டதோடு மீண்டும் கடந்த 21-ந் தேதி நேரில் ஆஜராகும்படி கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்நிலையில் மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி, தனது வக்கீல்கள் மோகன், ரத்தினம், பிரபு, லூசியா ஆகியோருடன் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜராகினார். அப்போது, குற்றப்பத்திரிகை நகலை முழுமையாக படித்து பார்த்து ஆட்சேபனை தெரிவிக்க ஏதுவாக கால அவகாசம் வழங்கும்படி கேட்டுக்கொண்டு அதற்கான மனுதாக்கல் செய்தார். இம்மனுவை ஏற்ற நீதிபதி புஷ்பராணி, 2 வார காலம் அவகாசம் வழங்கியதோடு மீண்டும் இந்த மாதம் 5-ந் தேதி நேரில் ஆஜராகும்படியும் உத்தரவிட்டார். மேலும் அவகாசம் கேட்டு வழக்கு இந்த மாதம் 19 ஆம் தேதிக்கு ஒத்திவக்கப்பட்டது.

இன்று மாணவி தரப்பினர் குற்றப்பத்திரிக்கை நகல் மீது ஆட்சியபனை தெரிவிக்க மேலும் அவகாசம் கேட்டுள்ளனர். இதனால் மாணவி வழக்கு விசாரணையை விழுப்புரம் நீதிமன்றம் அடுத்த மாதம் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்