'இஸ்லாமிய மக்கள் மீது கலைஞர் கருணாநிதி அளவற்ற அன்பு வைத்திருந்தார்' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பெரம்பூரில் நடைபெறும் சமத்துவ இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
சென்னை,
ரமலான் பண்டிகையை முன்னிட்டு சென்னை பெரம்பூரில் நடைபெறும் சமத்துவ இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்-அமைச்சர், அனைத்து இஸ்லாமிய மக்களுக்கும் தனது ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "இஸ்லாமிய மக்கள் மீது கலைஞர் கருணாநிதி அளவற்ற அன்பு வைத்திருந்தார். அந்த அன்பும், பாசமும் என்றும் அழியாமல் தொடர்ந்து நிலைத்திருக்கும். இந்த இப்தார் விருந்து நிகழ்ச்சியில் முதல்-அமைச்சராகவோ, சட்டமன்ற உறுப்பினராகவோ இல்லாமல் உங்களில் ஒருவனாக ஒவ்வொரு ஆண்டும் பங்கேற்று வருகிறேன்.
இஸ்லாமிய மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். கடந்த 1969-ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த போது முதல் முறையாக 'மிலாது நபி' தினத்திற்கு அரசு விடுமுறையை உருவாக்கி தந்தார். அதன் பிறகு வந்த அ.தி.மு.க. ஆட்சி அதை ரத்து செய்த நிலையில், மீண்டும் ஆட்சிக்கு வந்த கருணாநிதி அந்த விடுமுறையை மீண்டும் அமல்படுத்தினார்" என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.