கக்கரம்பட்டி, வி.தளவாய்புரம் கிராமத்தில் புதிய சமுதாய நலக்கூடங்கள் திறப்பு விழா:கனிமொழி எம்.பி பங்கேற்பு

கக்கரம்பட்டி, வி.தளவாய்புரம் கிராமங்களில் புதிய சமுதாய நலக்கூடங்களை கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்.

Update: 2023-04-27 18:45 GMT

ஓட்டப்பிடாரம்:

கக்கரம்பட்டி, வி.தளவாய்புரம் கிராமங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாயநலக்கூடங்களை கனிமொழி எம்.பி.திறந்துவைத்தார்.

சமுதாய நலக்கூடங்கள் திறப்பு

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கக்கரம்பட்டி, வி.தளவாய்புரம் ஆகிய கிராமங்களில் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் தலா ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது.

விழாக்களுக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கனிமொழி எம்.பி தலா ரூ.30 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 2 புதிய சமுதாய நலக்கூடங்களை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.

விளாத்திகுளத்துக்கு அதிக நிதி

அப்போது அவர் பேசுகையில், விளாத்திகுளம் தொகுதிக்கு தான் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சமூக பொறுப்பு நிதி ரூ.7 கோடி திரட்டப்பட்டு, அதிலும் விளாத்திகுளத்துக்கு தான் அதிகமாக கொடுக்கப்பட்டு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இப்பகுதியில் கதிர் அடிக்கக்கூடிய களம் விரைவில் அமைக்கப்படும். சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கலையரங்கம் கட்டப்பட்டு வருகிறது.

அதே போல் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளும் விரைவில் நிறைவடைந்துவிடும். பயணிகள் நிழற்குடை பணிகள் நிறைவடைந்துள்ளன. அது விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும். பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நாங்கள் அனைவரும் இணைந்து நிறைவேற்றி தருவோம். எப்போதும் மக்களோடு நாங்கள் துணை நிற்போம். வி.தளவாய்புரம் கிராமத்தில் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திய கிராமமாக இருப்பது பாராட்டுக்குரியது, என்றார்.

கலந்துகொண்டவர்கள்

விழாவின் போது ஜீ.வி.மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, யூனியன் துணை தலைவர் காசிவிஸ்வநாதன், குறுக்குச்சாலை பஞ்சாயத்து தலைவர் முனியம்மாள், கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி, தாசில்தார்கள் நிஷாந்தினி, கிருஷ்ணகுமாரி, ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஓட்டப்பிடாரம் அருகே உள்ள தெற்கு சிந்தலக்கட்டை கிராமத்தில் புதிய பகுதி நேர ரேஷன் கடையை கனிமொழி எம்.பி. திறந்து வைத்து பொருட்களை அட்டைதாரர்களுக்கு வினியோகம் செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்