"நீதியை ஒருபோதும் தவற விடக்கூடாது"-ஐகோர்ட்டு நீதிபதி பி.என்.பிரகாஷ் நெகிழ்ச்சி
பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த மதுரை மண்ணில் நீதியை ஒருபோதும் தவற விடக்கூடாது என்று ஐகோர்ட்டு நீதிபதி பி.என்.பிரகாஷ் பேசினார்.;
பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த மதுரை மண்ணில் நீதியை ஒருபோதும் தவற விடக்கூடாது என்று ஐகோர்ட்டு நீதிபதி பி.என்.பிரகாஷ் பேசினார்.
சொக்கரிடம் வேண்டுதல்
சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பி.என்.பிரகாஷ் விரைவில் ஓய்வு பெற உள்ளார். இதையடுத்து அவருக்கு மதுரை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கங்கள் சார்பில் நேற்று பாராட்டு விழா நடந்தது.
இதில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் பாராட்டி பேசினார். பின்னர் நீதிபதி பி.என்.பிரகாஷ் நெகிழ்ச்சியுடன் பேசியதாவது:-
மதுரைக்கும் எனக்கும் உள்ள தொடர்பு ஆழமானது. உதாரணமாக, கடந்த 2000-ம் ஆண்டில் மதுரை கோர்ட்டில் நடந்த போதைப்பொருள் வழக்கில் சிறப்பு அரசு வக்கீலாக நியமிக்கப்பட்டேன். அந்த வழக்கின் குற்றவாளிகள் வலுவான பின்புலம் உள்ளவர்கள். இதனால் சாட்சிகள் அனைத்தும் பிறழ்சாட்சியாகின. வழக்கின் போக்கு அரசு தரப்புக்கு எதிராக சென்றது.
இதனால் குழப்பம் அடைந்த நான், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று மீனாட்சி-சொக்கநாதரை உருகி வழிபட்டு வந்தேன். நீதிக்கு பெயர்பெற்ற மதுரையில், குற்றவாளிகளை தப்பிக்க விடலாமா? என கோவிலில் இறைவனிடம் கேள்வி எழுப்பிவிட்டு வந்தேன்.
பணி வாய்ப்புகள்
அதன்பின் வழக்கின் போக்கு திசை மாறி, குற்றவாளிகளான கணவன்-மனைவிக்கு தலா 15 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. நான் நீதிபதி ஆன பின்பு, அந்த இருக்கை சொக்கனுடையது. பணி நேரத்தில் என்னுள் சொக்கன் இருந்து தீர்ப்புகளை வழங்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வேன்.
2020-ம் ஆண்டில் கொரோனா தொற்று பரவிய நேரத்தில் உயிரையும் துச்சமென நினைத்து பணியாற்றினோம். எனக்கு நீதிபதி புகழேந்தி ேபாதிய ஒத்துழைப்பு கொடுத்தார். அதன்மூலம் தடையின்றி வேலை செய்தோம். பத்திரிகை அலுவலக எரிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனையை உறுதி செய்தது, சாத்தான்குளம் வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்து விசாரணையை கண்காணித்தது போன்றவை எல்லாம் சந்தர்ப்பத்தின் மூலம் கிடைத்த வாய்ப்புகள்தான்.
நீதி தவறக்கூடாது
சொக்கநாதரின் வழிகாட்டுதலால் பாண்டிய மன்னர்கள் நீதி வழுவாமல் மதுரையில் ஆட்சி நடத்தியுள்ளனர். அவ்வளவு பெருமை வாய்ந்த மதுரையில் நீதியைத் தவறவிடலாமா? என்றால், ஒருபோதும் கூடாது. அந்த வழியில் சொக்கநாதரின் ஆசியுடன் நீதிபதியாக பணியாற்றியதில் பெருமை கொள்கிறேன்.
இவ்வாறு நீதிபதி பேசினார்.
முன்னதாக வக்கீல் சங்கங்களின் நிர்வாகிகள் சீனிவாச ராகவன், அன்பரசு, ராமகிருஷ்ணன், ஆர்.வெங்கடேஷ் ஆகியோர் உள்பட பலர் பாராட்டி பேசினர். முடிவில் வக்கீல் ஆனந்தவள்ளி நன்றி கூறினார்.
விழாவில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், புகழேந்தி, ஜெகதீஷ் சந்திரா, விஜயகுமார், குமரேஷ் பாபு, அரசு பிளீடர் திலக்குமார், சங்க நிர்வாகிகள் கே.பி.நாராயணகுமார், கிருஷ்ணதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி
முன்னதாக நேற்று காலையில் வக்கீல் கு.சாமிதுரை ஏற்பாட்டின்பேரில் ஒரு அறக்கட்டளை சார்பில் நடந்த விழாவில் நீதிபதி பி.என்.பிரகாஷ் பங்கேற்று, மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளை வழங்கினார். மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி வடமலை, சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் ரஜினி, தலைமை குற்றவியல் நீதிபதி பசும்பொன் சங்கையா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.