வாலிபரை கட்டையால் தாக்கி கொலை செய்த கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

திருப்பூரில் வாலிபரை கட்டையால் தாக்கி கொலை செய்த கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.

Update: 2023-08-28 18:18 GMT

திருப்பூரில் வாலிபரை கட்டையால் தாக்கி கொலை செய்த கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.

கட்டிட தொழிலாளி

திருப்பூர் விஜயாபுரம் அங்காளம்மன் நகரை சேர்ந்தவர் கோகுலகண்ணன் (வயது 28). இவருடைய நண்பர் விஜயாபுரம் மூகாம்பிகை நகரை சேர்ந்த சுரேஷ் (33). இவர்கள் இருவரும் கட்டிட தொழிலாளர்கள். கோகுலகண்ணன், சுரேசின் வீட்டுக்கு செல்லும்போது அவருடைய மனைவி மற்றும் கொழுந்தியாவிடம் பேசி வந்துள்ளார். இதை சுரேஷ் கண்டித்துள்ளார்.

கடந்த 14-7-2019 அன்று சுரேஷ் தனது மனைவி, கொழுந்தியாவிடம் இதுதொடர்பாக சண்டை போட்டதும் அவர்கள் 2 பேரும் வெளியூர் சென்று விட்டனர். இதனால் கோபத்தில் இருந்த சுரேஷ், கோகுலகண்ணனை தீர்த்துக்கட்ட திட்டம்போட்டார். அன்று மாலை சுரேசின் வீட்டில் அமர்ந்து 2 பேரும் மது அருந்தினார்கள். அப்போது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. உடனே கோகுலகண்ணன் அங்கிருந்து தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.

கட்டையால் தாக்கினார்

பின்னால் சென்ற சுரேஷ், கட்டையால் கோகுலகண்ணனின் தலையில் சரமாரியாக தாக்கி விட்டு சென்று விட்டார். இதில் கோகுலகண்ணன் மயங்கி சரிந்தார். அதன்பிறகு சுரேஷ் மீண்டும் அங்கு சென்று பார்த்தபோது மயங்கிய நிலையில் கிடந்த கோகுலகண்ணனை தூக்கிக்கொண்டு மீண்டும் தனது வீட்டுக்கு வந்தார். அங்கேயே படுக்க வைத்தார். மறுநாள் காலையில் கோகுலகண்ணனை ஆம்புலன்ஸ் மூலமாக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அப்போது மதுபோதையில் கோகுலகண்ணன் கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் காயமடைந்ததாக சுரேஷ் தெரிவித்தார்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் கோகுலகண்ணன் இறந்தார். இதுகுறித்து நல்லூர் போலீசார் விசாரணை நடத்தியபோதே, சுரேஷ் அடித்ததில் கோகுலகண்ணன் இறந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கொலை வழக்குப்பதிவு செய்து சுரேசை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆயுள் தண்டனை

இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. கொலை குற்றத்துக்கு ஆயுள் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம், தடயத்தை மறைத்த குற்றத்துக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம், இதை ஏக காலத்தில் சுரேஷ் அனுபவிக்க நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் திருப்பூர் மாவட்ட குற்றத்துறை அரசு வக்கீல் கனகசபாபதி ஆஜராகி வாதாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்