வீணாக வழிந்தோடும் கூட்டு குடிநீர் திட்ட தண்ணீர்

தியாகதுருகம் அருகே குழாய் உடைந்து வீணாக வழிந்தோடும் கூட்டு குடிநீர் திட்ட தண்ணீர்

Update: 2022-05-21 17:10 GMT

கண்டாச்சிமங்கலம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரிஷிவந்தியம் - மணலூர்பேட்டை கூட்டு குடிநீர் திட்டம் கடந்த 2000-ம் ஆண்டு முதல் செயல்பட்டுவருகிறது. மணலூர் பேட்டை தென்பெண்ணை ஆற்றில் இருந்து சின்னசேலம் வரை 60 கி.மீ. தூரத்திற்கு குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாடாம்பூண்டி, லாலாபேட்டை, பாசார், மாடூர், கள்ளக்குறிச்சி அகிய இடங்களில் நீர் உந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தின் மூலம் கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சின்னசேலம் ஆகிய நகரங்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் தண்ணீர் செல்லும் சிமெண்டு குழாய்கள் பல்வேறு இடங்களில் பலவீனமடைந்து நீர் கசிவு ஏற்பட்டு வீணாக வழிந்தோடுவதை காண முடிகிறது. இவ்வாறு தியாகதுருகம் அருகே கரீம்ஷாதக்கா பகுதியில் குழாய் உடைந்து வீணாக வழிந்தோடிய குடிநீர் குடியிருப்பு பகுதியில் குளம்போல் தேங்கி நிற்கிறது.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது. இன்னமும் ஒருகுடம் தண்ணீர் கிடைக்காமல் அல்லல்படும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பு அதிகாரிகள் வீடுவீடாக சென்று குடிநீரை வீணாக்காமல் சேமிக்க வேண்டும், மழைநீர் உயிர் நீர், விண்ணின் மழைத்துளி மண்ணின் உயிர்துளி என உபதேசம் செய்தார்கள். இவையெல்லாம் ஊருக்குத்தான் உபதேசமா என்ற கேள்வி எழுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகரிகள் உடைந்த குழாயை சரிசெய்து குடிநீர் வீணாக வழிந்தோடுவதை தடுத்து நிறுத்த வேண்டும். குடிநீர் பிரச்சினை உள்ள கிராமங்களை கண்டறிந்து அங்கு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்