சின்னாளப்பட்டியில் பெண் வக்கீல் வீட்டில் நகை திருட்டு
சின்னாளப்பட்டியில் பெண் வக்கீல் வீட்டில் 5 பவுன் நகை திருடுபோனது.
சின்னாளப்பட்டி பஸ் நிலையம் அருகே உள்ள வீட்டுவசதி குடியிருப்பில் வசித்து வருபவர் சங்கர். இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவருடைய மனைவி காமாட்சி. வக்கீல். நேற்று முன்தினம் இவர்கள் வீட்டை பூட்டி விட்டு, தங்களது குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சென்று விட்டனர்.
இந்தநிலையில் நேற்று மதியம் அவர்கள் வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் நகை திருடப்பட்டிருந்தது. தனது குடும்பத்தினருடன் சங்கர், வெளியூர் சென்றதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இதுகுறித்து சின்னாளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.