நங்கநல்லூரில் கம்ப்யூட்டர் நிறுவன அதிகாரி வீட்டில் நகை-வெள்ளி பொருட்கள் கொள்ளை

நங்கநல்லூரில் கம்ப்யூட்டர் நிறுவன அதிகாரி வீட்டில் நகை மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர்.

Update: 2022-06-01 05:40 GMT

சென்னையை அடுத்த நங்கநல்லூர் தில்லை கங்கா நகர் 25-வது தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 50). இவர் நாவலூரில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் தொழில்நுட்ப நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 26-ந் தேதி தனது குடும்பத்துடன் கோவை சென்றிருந்தார். பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது, கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், வீட்டிற்குள் சென்று பார்த்த போது, 2 பவுன் தங்க சங்கிலி, 8 கிலோ வெள்ளி பொருட்கள், 2 லேப்டாப்கள், செல்போன்கள் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர்.

அதேபோல் தில்லை கங்கா நகர் 17-வது தெருவை சேர்ந்தவர் குமாரசாமி (50). இவர் குடும்பத்தினர் கோவை சென்றதால் தங்கை வீட்டில் தங்கி உள்ளார். இந்த நிலையில், அவரது வீட்டின் கதவை மர்ம ஆசாமிகள் உடைத்து பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்களை திருடி சென்று உள்ளனர். இது குறித்து ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் இ.எஸ்.ஐ. அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை (40). இவர் அண்ணனூர் அருகே ஸ்ரீசக்தி நகரில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை கடையை திறக்க வந்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு விலை உயர்ந்த 10 செல்போன்கள் மற்றும் ரூ.4 ஆயிரத்தையும் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்