திருவள்ளூர் அருகே பெண்ணிடம் நூதன முறையில் நகை பறிப்பு - 2 பேருக்கு வலைவீச்சு

திருவள்ளூர் அருகே பெண்ணிடம் நூதன முறையில் 11 பவுன் நகை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-01-07 04:05 GMT

திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் வரதராஜன் குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மனைவி சுலோச்சனா (வயது 57). இவர் நேற்று முன்தினம் தாம்பரத்தில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று விட்டு தனது வீட்டிற்கு செல்வதற்காக பஸ் மூலம் மணவாளநகர் வந்து இறங்கி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இவரை பின்தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்களில் ஒருவர் இந்தப்பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவம் நடைபெறுகிறது. எனவே உங்களது நகைகளை பத்திரமாக கழற்றி பையில் வைத்துக்கொண்டு பாதுகாப்பாக செல்லுங்கள் எனக்கூறி உள்ளார்.

அந்த நபர் கூறியதை உண்மை என்று நம்பிய சுலோக்சனா தான் அணிந்திருந்த 11 பவுன் தங்க சங்கிலியை கழற்றி தான் வைத்திருந்த பர்ஸில் வைக்க முயன்றார்.

அதை கண்ட மேற்கண்ட 2 பேரும் அந்த பெண்ணிடம் தாங்கள் பத்திரமாக ஒரு பேப்பரில் சுற்றி மடித்து தருவதாக கூறி நகையை வாங்கிக்கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சுலோக்சனா நடந்த சம்பவம் குறித்து மணவாளநகர் போலீசில் புகார் செய்தார்.

தகவலறிந்த திருவள்ளூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தா சுக்லா, மணவாளநகர் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீசார் விரைந்து வந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் பெண்ணிடம் நூதன முறையில் நகைகளை பறித்து தப்பி ஓடிய நபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்