தனியாக இருந்த மூதாட்டியிடம் நகை பறிப்பு
வாடகைக்கு வீடு பார்ப்பதுபோல நடித்து தனியாக இருந்த மூதாட்டியிடம் மர்ம நபர்கள் நகை பறித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சரவணம்பட்டி
வாடகைக்கு வீடு பார்ப்பதுபோல நடித்து தனியாக இருந்த மூதாட்டியிடம் மர்ம நபர்கள் நகை பறித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
நகை பறிப்பு
சரவணம்பட்டி அருகே உள்ள சிவானந்தபுரம் ஜனதா நகரை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மனைவி ஜீவரத்தினம் (வயது 72). இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவரது வீட்டிற்கு 30 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் ஜீவரத்தினத்திடம் இந்த பகுதியில் வீடு வாடகைக்கு உள்ளதா? என்று கேட்டுக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தனர்.
வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த அந்த வாலிபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் மூதாட்டியை கீழே தள்ளி, அவர் அணிந்து இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். மேலும் மூதாட்டியை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு, வாலிபர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
2 பேருக்கு வலைவீச்சு
இதற்கிடையில் மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்களிடம் நடந்தது குறித்து மூதாட்டி தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் நகை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடினர். ஆனால் கண்டு பிடிக்கமுடியவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூதாட்டியிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.