அண்ணா நகரில் வருமானவரித்துறை அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை - வாலிபர் கைது
அண்ணா நகரில் வருமானவரித்துறை அதிகாரி வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை அண்ணா நகர் மேற்கு பகுதியில் உள்ள வருமான வரித்துறை அலுவலக அதிகாரி குடியிருப்பு வளாகத்தில் வசித்து வருபவர் ராமசுப்பிரமணியன். இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் அதிகாரியாக உள்ளார். இவர் கடந்த 25-ந்தேதியன்று வருமான வரி சோதனை தொடர்பாக அண்ணா நகரில் ஒருவரது வீட்டில் நடந்த வருமான வரிசோதனையில் இருந்ததாக தெரிகிறது.
அப்போது இவரது மனைவி ஆஷாவும், மகனும் அன்றிரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனா். அப்போது இவரது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் ஒருவர் பீரோவில் வைத்திருந்த 18 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் பணம் திருடிசென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த திருமங்கலம் போலீசார் தடயவியல் நிபுணா்கள் உதவியுடன் கைரேகைகளை பதிவு செய்து விசாரித்தனர். மேலும் கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி வில்லிவாக்கத்தை சேர்ந்த ஆனந்த் (வயது 20) என்பவரை கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.