12 தாலுகாக்களில் 19-ந் தேதி ஜமாபந்தி தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 தாலுகாக்களில் வருகிற 19-ந் தேதி ஜமாபந்தி தொடங்குகிறது. இதனால் குறைதீர்வு கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-05-16 13:12 GMT


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 தாலுகாக்களில் வருகிற 19-ந் தேதி ஜமாபந்தி தொடங்குகிறது. இதனால் குறைதீர்வு கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஜமாபந்தி

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 தாலுகாக்களில் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் நீங்கலாக வருகிற ஜூன் 1-ந் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

அதன்படி தண்டராம்பட்டு தாலுகாவில் மாவட்ட கலெக்டர் தலைமையில் வருகிற 19-ந் தேதி முதல் 23-ந் தேதி வரையும், திருவண்ணாமலை தாலுகாவில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் வருகிற 19-ந் தேதி முதல் 29-ந் தேதி வரையும், செய்யாறு தாலுகாவில் செய்யாறு சிப்காட் தனி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் வருகிற 19-ந் தேதி முதல் 30-ந் தேதி வரையும் நடக்கிறது.

வெம்பாக்கம் தாலுகாவில் செய்யாறு சப்-கலெக்டர் தலைமையில் வருகிற 19-ந் தேதி முதல் 25-ந் தேதி வரையும், போளூர் தாலுகாவில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தலைமையில் வருகிற 19-ந் தேதி முதல் 25-ந் தேதி வரையும், கீழ்பென்னாத்தூர் தாலுகாவில் திருவண்ணாமலை வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் வருகிற 19-ந் தேதி முதல் 23-ந் தேதி வரையும் நடைபெற உள்ளது.

ஆரணி தாலுகா

அதேபோல் ஆரணி தாலுகாவில் ஆரணி உதவி கலெக்டர் தலைமையில் வருகிற 19-ந் தேதி முதல் 25-ந் தேதி வரையும், செங்கம் தாலுகாவில கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) தலைமையில் வருகிற 19-ந் தேதி முதல் 25-ந் தேதி வரையும் நடைபெற உள்ளது.

கலசபாக்கம் தாலுகாவில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையில் வருகிற 19-ந் தேதி முதல் 23-ந் தேதி வரையும், வந்தவாசி தாலுகாவில் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தலைமையில் வருகிற 19-ந் தேதி முதல் 1-ந் தேதி வரையும், சேத்துப்பட்டு தாலுகாவில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) தலைமையில் வருகிற 19-ந் தேதி முதல் 24-ந் தேதி வரையும், ஜமுனாமரத்தூர் தாலுகாவில் பழங்குடியினர் நல திட்ட அலுவலர் தலைமையில் வருகிற 19-ந் தேதி முதல் 22-ந் தேதி வரையும் நடைபெற உள்ளது.

குறைதீர்வு நாள் கூட்டங்கள் ரத்து

எனவே திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 19-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம், மாவட்டம் மற்றும் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம், மாதந்தோறும் நடைபெறும் மனுநீதி நாள் முகாம் மற்றும் கோட்ட அளவில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வு நாள் கூட்டம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் தங்களது குறை தொடர்பான மனுக்களை தொடர்புடைய தாலுகாவில் நடைபெறும் ஜமாபந்தி கூட்டத்தை நடத்தும் அலுவலர்களிடம் கொடுத்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்