கோட்டை ஈஸ்வரன் கோவில் நிர்வாகிகளுடன் ஜமாத் கூட்டமைப்பினர் சந்திப்பு
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவிலில் ஜமாத் நிர்வாகிகளுடன் மத நல்லிணக்க சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
உக்கடம்
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவிலில் ஜமாத் நிர்வாகிகளுடன் மத நல்லிணக்க சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கார் வெடிப்பு சம்பவம்
கோவையில் கடந்த 23-ந் தேதி அதிகாலையில் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது என்.ஐ.ஏ. அதிகாரிகள் இந்த வழக்கின் விசாரணையை முடுக்கி உள்ளனர்.
கார் வெடிப்பு சம்பவத்தால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்கவும், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையிலும் நேற்று கோட்டைமேட்டை சுற்றியுள்ள பெரிய பள்ளிவாசல், சின்னபள்ளிவாசல், கேரள பள்ளிவாசல் பகுதிகளை சேர்ந்த அனைத்து ஜமாத் கூட்டமைப்பு நிர்வாகிகள் கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு வந்தனர்.
கோவிலில் சந்திப்பு நிகழ்ச்சி
அவர்களை கோவில் அர்ச்சகர் சுந்தரரேசன் மற்றும் கோவில் ஊழியர்கள் வரவேற்று அழைத்துச் சென்றனர். கோவில் பிரகாரத்தில் உள்ள அலுவலக அறையில் கோவில் செயல் அதிகாரி பிரபாகரன் தலைமையில் அமர்ந்து கலந்துரையாடினர். அதே பகுதியில் பல தலைமுறைகளாக வசித்து வரும் தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். பின்பு கோவில் அர்ச்சகர்கள் ஜமாத் நிர்வாகிகளுக்கு பட்டுத் துண்டு அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து நின்று தோள் மேல் கை போட்டு சகோதரத்துவம் பாராட்டி கொண்டனர்.
கார்வெடிப்புக்கு கண்டனம்
இந்த நிகழ்ச்சிக்குப் பின் சுன்னத் ஜமாத் கூட்டமைப்பு செயலாளர் எம்.ஏ. இனாயத்துல்லா நிருபர்களிடம் கூறியதாவது:-
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் நூறாண்டுகள் பழமை வாய்ந்த கோட்டை ஈஸ்வரன் கோவில் நிர்வாகிகளை சந்தித்தோம். 7 தலைமுறைகளாக இந்த கோட்டைமேட்டில் வசித்து வருகிறோம். இந்த கோட்டை ஈஸ்வரன் கோவிலை சகோதரத்துவத்துடன் பார்த்து வருகிறோம். கார் வெடிப்பு சம்பவத்தை எங்கள் அமைப்புகள் கண்டிக்கிறது.
சிறுபான்மை மக்களும், பெருபான்மை மக்களும் சமூக நல்லிணக்கத்தோடு வாழ்வதையே விரும்புகிறோம். உங்களோடு நாங்கள் எங்களோடு நீங்கள் என்ற நோக்கத்தில் அனைத்து நல்ல விஷயங்களை முன்னெடுக்க உள்ளோம். எவ்வித பயங்கரவாதத்திற்கும் இடம் கொடுக்க மாட்டோம். சிறுவயதிலிருந்து அனைவரும் ஒன்றாக இருந்தது குறித்து எல்லாம் பேசினோம். மேலும் கோட்டை ஈஸ்வரன் கோவில் தேர் திருவிழாவின் போது ஒத்துழைப்பு கொடுத்தது குறித்து விவாதித்தோம்.
சீர்குலைக்க முடியாது
தமிழ்நாட்டில் இந்து முஸ்லீம் ஒற்றுமையை யாரும் சீர்குலைக்க முடியாது. அரசியல் தலைவர்கள் மதரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். ஆன்மிகத்தையே பின்பற்றும் எங்களை அமைதியாக வாழ விடுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில், பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் ஹாரூன், அபூபக்கர் சித்திக், முகமது முதது, கலீல், பைசல், ஹுசைன், குஞ்சுமோன், அப்துல்கபூர், பைசல், சித்திக், சர்புதீன், முகமது அனீஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.