கரூர் நகரத்தில் முதல் முறையாக மார்ச் 5-ந்தேதி ஜல்லிக்கட்டு போட்டி: அமைச்சர் தகவல்

கரூர் நகரத்தில் முதல் முறையாக மார்ச் 5-ந்தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது என அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2023-01-28 18:30 GMT

விளையாட்டு போட்டிகள்

கரூர் மாவட்ட தி.மு.க சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி, மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக விளையாட்டு போட்டிகள் கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது. இதில் நேற்று தொடங்கிய மாணவிகளுக்கான குழு விளையாட்டு போட்டியை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாணவர்களுக்கான குழு போட்டிகளும், அடுத்த மாதம் 4-ந்தேதி (சனிக்கிழமை) மாணவிகளுக்கான தடகளப்போட்டிகளும், 5-ந்தேதி (திங்கட்கிழமை) மாணவர்களுக்கான தடகளப்போட்டிகளும் நடைபெற உள்ளது.

பேட்டி

இதைத்தொடர்ந்து அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான குழு போட்டிகள் 2 நாட்களும், தனிநபர் போட்டிகள் 2 நாட்களும் நடைபெறுகிறது. மாணவர்களுக்கான குழு போட்டியில் பங்கேற்க 136 அணிகள் வந்துள்ளன. ஏறத்தாள 1,136 மாணவர்கள் விளையாட்டில் பங்கு பெற்று உள்ளனர்.

மாணவிகளுக்கான போட்டியில் 250 அணிகள் பங்கு பெறுகின்றன. இதில் 1,993 மாணவிகள் போட்டியில் கலந்து கொள்கின்றன.

5-ந்தேதி ஜல்லிக்கட்டு

கரூர் மாவட்டத்தில் விளையாட்டை மேம்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. கரூர் நகரத்தில் முதல் முறையாக வருகிற மார்ச் மாதம் 5-ந்தேதி ஜல்லிக்கட்டு ேபாட்டி நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் விரைவில் ெதாடங்க உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்