3 வாலிபர்களுக்கு சிறை தண்டனை

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 3 வாலிபர்களுக்கு சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

Update: 2023-09-26 18:23 GMT

கஞ்சா ஆயில்

புதுக்கோட்டையில் கூரியர் பார்சல் வழியாக கஞ்சா ஆயில் கடத்தப்படுவதாக மதுரை மத்திய போதைப்பொருள் தடுப்பு சுங்கப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவத்தன்று புதுக்கோட்டையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது திருமயம் அருகே மேல்நிலைப்பட்டியை சேர்ந்த வாலிபர்கள் மணிகண்டன், மென்னன் என்கிற விஜி ஆகியோர் அந்த பார்சலை வாங்கிய போது போலீசார் பிடித்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 620 கிராம் கஞ்சா ஆயிலை பறிமுதல் செய்தனர்.

சிறையில் அடைப்பு

மேலும் அந்த பார்சல் வாலிபரான முருகேசன் என்பவருக்கு வந்ததும், அவர் கோவையில் இருப்பதும் தெரிந்தது. அங்கு அவரது வீட்டிற்கு சென்று சோதனை நடத்தியதில் 21.48 கிராம் கஞ்சா ஆயிலும், 221 கிராம் தேனில் கலக்கப்பட்ட போதைப்பொருளையும் கைப்பற்றினர். இதையடுத்து மணிகண்டன், மென்னன், முருகேசன் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறை தண்டனை

இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் நீதிமன்றம் மற்றும் அத்தியாவசிய பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பாபுலால் இன்று தீர்ப்பு வழங்கினார். இதில் மணிகண்டன், மென்னன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார்.

மேலும் முருகேசனுக்கு பல்வேறு பிரிவுகளில் 17 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும், தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் தீர்ப்பளித்தார். அதன்படி முருகேசன் 5 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க உள்ளார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் திருமூர்த்தி ஆஜராகி வாதாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்