வாலிபர்களை தாக்கிய 2 பேருக்கு சிறை

சாதி பெயரை சொல்லி திட்டி வாலிபர்களை தாக்கிய 2 பேருக்கு சிறை விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு

Update: 2023-06-03 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள விநாயகபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் மகன் கவிராஜன் (வயது 19). இவர் பிளஸ்-2 வரை படித்து முடித்துவிட்டு நல்லூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த 14.4.2015 அன்று மாலை கவிராஜன் மற்றும் அவரது நண்பர்கள் பரமேஷ் (19), சுமன் ஆகியோர் பள்ளிச்சேரி ரெயில்வே ரோடு அருகே நடந்து சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது அங்குள்ள ஒரு நிலத்தில் பள்ளிச்சேரியை சேர்ந்தவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். இதைப்பார்த்த கவிராஜன், அந்த நபர்களிடம் சென்று எங்களையும் விளையாட சேர்த்துக்கொள்ளும்படி கூறியபோது பள்ளிச்சேரி திரவுபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்பிரமணி மகன் சுரேஷ்(25), மூர்த்தி மகன் அய்யனார்(24) ஆகியோர் சேர்ந்து கவிராஜனையும், பரமேசையும் சாதி பெயரை சொல்லி திட்டியுள்ளனர். மேலும் அய்யனார், கிரிக்கெட் ஸ்டெம்பை பிடுங்கி பரமேசின் தலையில் தாக்கினார். இதை தட்டிக்கேட்ட கவிராஜனையும் தாக்கினார். இதில் காயமடைந்த கவிராஜன், பரமேஷ் ஆகிய இருவரும் மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உரிய சிகிச்சை பெற்றனர்.

இதுகுறித்து கவிராஜன் கொடுத்த புகாரின் பேரில் சுரேஷ், அய்யனார் ஆகியோர் மீது எஸ்.சி., எஸ்.டி. சட்டப்பிரிவின் கீழ் கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியஜோதி, குற்றம் சாட்டப்பட்ட அய்யனாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், சுரேசுக்கு 3 மாதம் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்