முன்னாள் கிராம நிர்வாக அதிகாரிக்கு ஒரு ஆண்டு சிறை

இலவச வீட்டுமனை பட்டாவிற்கு ரூ.500 லஞ்சம் வாங்கிய முன்னாள் கிராம நிர்வாக அதிகாரிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2023-03-07 18:45 GMT

இலவச வீட்டுமனை பட்டாவிற்கு ரூ.500 லஞ்சம் வாங்கிய முன்னாள் கிராம நிர்வாக அதிகாரிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ரூ.500 லஞ்சம்

ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தை சேர்ந்தவர் அப்பாஸ்மந்திரி (வயது 69). இவர் அந்த பகுதியில் கடந்த 2005-ம் ஆண்டு கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தார். அப்போது அதேபகுதியை சேர்ந்த காதர்மைதீன் என்பவர் இலவச வீட்டுமனை பட்டாவிற்கு பரிந்துரை செய்ய கிராம நிர்வாக அதிகாரி அப்பாஸ்மந்திரியை அணுகி உள்ளார். பரிந்துரை செய்வதற்கு ரூ.ஆயிரம் லஞ்சம் கேட்டு இறுதியில் ரூ.500 தருமாறு கூறியுள்ளார். அந்த பணத்தை தர மனமில்லாத காதர்மைதீன் இதுகுறித்து ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் போலீசாரின் அறிவுரைப்படி காதர்மைதீன் ரூ.500 லஞ்ச பணத்தினை கொடுக்க முயன்றபோது போலீசார் கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட முதன்மை குற்றவியில் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

ஒரு ஆண்டு சிறை

வழக்கை விசாரித்த நீதிபதி கவிதா மேற்கண்ட அப்பாஸ்மந்திரிக்கு ஒரு ஆண்டு கடுங்காவல் சிறைதண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும், அதனை கட்டத்தவறினால் மேலும். 3 மாதம் சிறைதண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.

இந்த லஞ்ச வழக்கு தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி அப்பாஸ்மந்திரி பணியிடைநீக்கம் செய்யப்பட்டு ஓய்வு பெற்றுவிட்டார் என்பதும், 17 ஆண்டுகளுக்கு பின்னர் அவருக்கு லஞ்ச வழக்கில் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்