மொரப்பூர் அருகேபள்ளி மாணவியை கடத்தி பலாத்காரம் செய்தஆசிரியருக்கு 20 ஆண்டு சிறைதர்மபுரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
மொரப்பூர் அருகே பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்து பலாத்காரம் செய்த ஆசிரியருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தர்மபுரி மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
மாணவி பலாத்காரம்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மேட்டுப்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் முபாரக் (வயது 27). இவர் தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். அதே பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்த 14 வயது மாணவி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடினர்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மொரப்பூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் மாயமான மாணவியை ஆசிரியர் முபாரக் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது.
மேலும் அந்த ஆசிரியர் மாணவியை குழந்தை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்ததும் உறுதியானது. முபாரக்கிற்கு ஏற்கனவே திருமணம் நடந்திருப்பதும் தெரியவந்தது.
20 ஆண்டு சிறை
இதுதொடர்பாக போக்சோ சட்டம் மற்றும் குழந்தை திருமண சட்டப்பிரிவுகளின் கீழ் மொரப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முபாரக்கை கைது செய்ததுடன், மாணவியை மீட்டனர்.
இந்த வழக்கு விசாரணை தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் முபாரக்கிற்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சையத் பர்க்கத்துல்லா தீர்ப்பு கூறினார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கல்பனா ஆஜராகி வாதாடினார்.