பஸ் வசதியின்றி பரிதவிக்கும் மாணவர்கள் லிப்ட் கேட்டு செல்லும் அவலம்

விழுப்புரம் அருகேபஸ் வசதியின்றி பரிதவிக்கும் மாணவர்கள் லிப்ட் கேட்டு செல்லும் அவலநிலை இருந்து வருகிறது.

Update: 2023-08-14 18:45 GMT

விழுப்புரம் 

விழுப்புரம் அருகே உள்ள கப்பியாம்புலியூர் கிராமத்தை சேர்ந்த மாணவ- மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் பனையபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் கிராமத்தில் இருந்து காலை வேளையில் பள்ளிக்கு செல்வதற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு போதிய பஸ் வசதிகள் இல்லை. இதனால் மாணவ- மாணவிகள் தங்களது கிராமத்தில் இருந்து தினமும் பனையபுரம் அரசு பள்ளிக்கு செல்வதற்கு படாத பாடுபட்டு வருகின்றனர்.

பண்ருட்டியில் இருந்து விக்கிரவாண்டிக்கு செல்லக்கூடிய அரசு டவுன் பஸ் தினந்தோறும் காலை 8.30 மணிக்கு கப்பியாம்புலியூர் வரும். அந்த பஸ்சில் பள்ளி மாணவ- மாணவிகள், விவசாயிகள், விவசாய கூலித்தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் பயணிக்க வேண்டியுள்ளது.

மாணவ- மாணவிகள் அவதி

குறிப்பாக இந்த பஸ்சில் சென்றால் மட்டுமே பள்ளிகளுக்கு மாணவ- மாணவிகள் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியும். இந்த பஸ்சை தவறவிட்டால் வேறு அரசு டவுன் பஸ் வசதிகள் கிடையாது. சென்னை- கும்பகோணம் சாலையில் செல்லும் தொலைதூர பஸ்களும் கப்பியாம்புலியூரில் நின்று செல்வதில்லை.

இதனால் போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவ- மாணவிகள், தினந்தோறும் சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் திரண்டு நின்று அவ்வழியாக வரும் சரக்கு வாகனங்கள், டிராக்டர்கள், இருசக்கர வாகனங்களை கைகாட்டி நிறுத்தி லிப்ட் கேட்டு ஏறி பள்ளிக்கு சென்று வரும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அப்படியே சென்றாலும் அவர்கள் பல சமயங்களில் குறித்த நேரத்திற்குள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்படுகிறது.

பயனில்லாத பஸ் பயண அட்டை

மேலும் கப்பியாம்புலியூர்- பனையபுரம் இடையே காலை வேளையில் போதுமான பஸ் வசதி இல்லாததால் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவச பஸ் பயண அட்டை இருந்தும் பஸ் ஏற முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் பள்ளிக்கு செல்ல வேண்டுமே என்று கருதி சில மாணவ-மாணவிகள் பயணச்சீட்டு எடுத்து தனியார் பஸ்கள் மூலமாக செல்கின்றனர். அவ்வாறு தனியார் பஸ்சில் பயணச்சீட்டு எடுத்து செல்ல முடியாத ஏழை, எளிய மாணவ-மாணவிகள் பலர், கப்பியாம்புலியூரில் இருந்து 3 கி.மீ. தூரமுள்ள பனையபுரத்தில் உள்ள பள்ளிக்கு நடந்தே சென்று வருகின்றனர். இதன் காரணமாக பள்ளிக்கு தாமதமாக செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

அதேபோல் பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பும்போதும் போதிய பஸ் வசதி இல்லாமல் மாணவ- மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர். தினந்தோறும் இந்த அவலம் நீடித்து வருவதாக மாணவ- மாணவிகள், பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். பஸ் வசதி இல்லாமல் சில நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வருவோரிடம் மாணவ-மாணவிகள் லிப்ட் கேட்டு செல்லும்போது விபத்துகளிலும் சிக்கி வருகின்றனர்.

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

எனவே கப்பியாம்புலியூர்- பனையபுரம் இடையே கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பள்ளி மாணவ- மாணவிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதேபோல் இந்த வழித்தடத்தில் அரசு டவுன் பஸ்கள் என்பதே யானைப் பசிக்கு சோளப்பொறி போல உள்ளதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கல்வியும், மருத்துவமும் இரு கண்கள் என்று கூறிவரும் அரசு, பள்ளி மாணவ- மாணவிகள் படும் சிரமத்தை போக்கிடும் வகையில் காலை- மாலை வேளைகளில் கப்பியாம்புலியூர்- பனையபுரம் வழித்தடத்தில் மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்களின் தேவைக்கேற்ப போதுமான பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்