"ஃபோர்டு ஆலை பணியாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை" - ராமதாஸ் அறிக்கை

ஃபோர்டு ஆலை பணியாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-02 10:20 GMT

சென்னை,

வணிகத்தில் இழப்பு ஏற்பட்டதையடுத்து சென்னை மற்றும் குஜராத்தில் உள்ள இரு ஆலைகளையும் மூடுவதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஃபோர்டு நிறுவனம் அறிவித்தது. இதனால் அதன் ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"சென்னையை அடுத்த மறைமலை நகர் ஃபோர்டு கார் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கான மாற்று வேலை, இழப்பீடு ஆகியவை குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், அந்த ஆலை இம்மாத இறுதியில் மூடப்படுவதாக வெளியாகி வரும் செய்திகள் பெரும் அதிர்ச்சி அளிக்கின்றன. இந்த விவகாரத்தில் தொழிலாளர் நலன் பாதிக்கப்படுவதை அரசு அனுமதிக்கக் கூடாது.

ஃபோர்டு கார் நிறுவனத்திற்கு சொந்தமாக சென்னை மறைமலை நகரிலும், குஜராத் மாநிலம் சனந்த் நகரிலும் இரு மகிழுந்து ஆலைகள் உள்ளன. வணிகத்தில் இழப்பு ஏற்பட்டதையடுத்து இந்த இரு ஆலைகளையும் மூடுவதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஃபோர்டு நிறுவனம் அறிவித்தது. அதனால், இந்த இரு ஆலைகளிலும் நேரடியாக பணியாற்றும் சுமார் 8,000 பணியாளர்கள் உள்ளிட்ட 38,000 பேர் வேலையிழப்பர் என்பதால் மத்திய, மாநில அரசுகள் இந்த விஷயத்தில் தலையிட்டு சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும்; தொழிலாளர்களின் வேலையை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன்.

அதன்பின்னர் 9 மாதங்களாகி விட்ட நிலையில், குஜராத் மாநிலத்தில் உள்ள ஆலையை டாடா நிறுவனம் வாங்கி நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. ஆனால், சென்னை ஆலையை பிற நிறுவனங்கள் மூலம் நடத்துவதற்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படாததாலும், அங்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட கார் உற்பத்தி அடுத்த சில நாட்களில் தயாரிக்கப்பட்டு விடும் என்பதாலும் எந்த நேரமும் ஃபோர்டு கார் ஆலை மூடப்படக்கூடும். ஆனால், அதில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மாற்று வேலையோ, இழப்பீடோ இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஆலையில் உள்ளேயும், வெளி வளாகத்திலும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஓர் ஆலை மூடப்பட்டால், அதில் பணியாற்றியவர்களுக்கு உரிய இழப்பீட்டையும், மாற்று வேலையையும் உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை ஆகும். ஆனால், ஃபோர்டு ஊழியர்கள் தாங்கள் பணியாற்றிய ஒவ்வொரு ஆண்டுக்கும் 385 நாட்களுக்கான ஊதியத்தை இழப்பீடாக தர வேண்டும் என்று கோருகின்றனர். ஆனால், ஆண்டுக்கு 87 நாட்கள் ஊதியம் மற்றும் ஒரு குறிப்பிட்ட தொகையை கருணைத் தொகையாக வழங்குவதாக ஃபோர்டு நிர்வாகம் கூறுகிறது. தொழிலாளர்கள் கோருவதற்கும், நிர்வாகம் கூறுவதற்கும் இடையே பெரும் இடைவெளி இருப்பதால், இழப்பீடு தொடர்பாக எந்த தீர்வும் இதுவரை எட்டப்படவில்லை.

ஃபோர்டு ஆலையில் பணியாற்றுவோரில் பெரும்பான்மையினர் 40 வயதைக் கடந்தவர்கள். அவர்களால், இனி வேறு நிறுவனங்களில் வேலை தேட முடியாது. அதைக் கருத்தில் கொண்டு தான் அவர்களுக்கான இழப்பீடு தீர்மானிக்கப்பட வேண்டும். இதில் தமிழக அரசுக்கும் பங்கு உண்டு. அந்தக் கடமையை தமிழக அரசு திறம்பட செய்து, ஃபோர்டு ஆலை தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத் தர வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நோக்கியா செல்பேசி ஆலை மூடப்பட்டபோது, கடைசி வரை பணியில் இருந்த சுமார் 800 பேருக்கு மட்டும் தான் அதிகபட்சமாக ரூ.7.50 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டது. நோக்கியா ஆலை மூடப்பட்டதால் வேலை இழந்தவர்களுக்கு இன்று வரை சரியான வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. அவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை அவர்களின் வாழ்வாதார இழப்பை எந்த வகையிலும் ஈடு செய்யவில்லை. அதே போன்ற நிலை ஃபோர்டு ஊழியர்களுக்கும் ஏற்படக்கூடாது.

மறைமலை நகர் கார் ஆலையை மூடப்போவதாக ஃபோர்டு நிர்வாகம் அறிவித்த போதே, அந்த ஆலையை வேறு நிறுவனங்கள் மூலம் இயக்கச் செய்து, அங்கு பணியாற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 14.09.2021 அன்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை அழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதன்பின் 06.10.2021 அன்று டாட்டா நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஃபோர்டு ஆலையை டாட்டா நிறுவனத்தின் மூலம் நடத்துவது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் கலந்தாய்வு செய்தார்.

ஒரு கட்டத்தில் மறைமலை நகர் ஆலையில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வது குறித்து தமிழக அரசுடன் ஃபோர்டு நிர்வாகம் ஆலோசனை நடத்துவதாக செய்திகள் வெளியாகின. அதனால், ஃபோர்டு ஆலை ஊழியர்களுக்கு மாற்று வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், இதில் எந்த முயற்சியும் வெற்றியடையாத நிலையில், பணியாளர்களின் வாழ்வாதாரம் கேள்விகுறியாகியுள்ளது. அவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படாத நிலையில், போராட்டம் தீவிரமடையும் வாய்ப்புகள் உள்ளன.

ஃபோர்டு ஆலை பணியாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். அதன்படி, ஃபோர்டு ஆலை நிர்வாகத்துடன் பேசி பணியாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, மறைமலை நகரில் உள்ள ஃபோர்டு ஆலையை வேறு கார் நிறுவனங்களை ஏற்று நடத்தச் செய்வதன் மூலம் அவர்களின் வேலை மற்றும் எதிர்காலத்தையும் தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்."

இவ்வாறு தனது அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்