டி.ஆர்.பாலு என் மீது வழக்கு தொடர்ந்திருப்பது நகைப்புக்குரியது - அண்ணாமலை

ஆவின் நிர்வாகத்தில் நடைபெற்ற முறைகேடு காரணமாக நாசர் அமைச்சரவையில் இருந்து விடுவிப்பு என அண்ணாமலை கூறியுள்ளார்.

Update: 2023-05-12 07:42 GMT

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தி.மு.க. மூத்த நிர்வாகிகளின் சொத்து பட்டியலை கடந்த மாதம் 14-ந்தேதி பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். எந்தவித ஆதாரமும் இல்லாமல் அவதூறு ஏற்படுத்தும் வகையில் தவறான புள்ளிவிவரங்களுடன் சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தரப்பில் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

மு.க.ஸ்டாலின் தரப்பில் அனுப்பப்பட்ட நோட்டீசில், அவதூறு குற்றச்சாட்டுகளை தெரிவித்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ரூ.500 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதேபோன்று, உதயநிதி ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் தரப்பிலும் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த நோட்டீசுக்கு அண்ணாமலை பதில் அனுப்பினார். அதில், 'மன்னிப்பு, இழப்பீடு என்ற பேச்சுக்கே இடமில்லை. தான் கூறிய குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் உள்ளன. எந்த நடவடிக்கை என்றாலும் சட்டப்படி சந்திக்க தயார்' என கூறியிருந்தார்.

இந்தநிலையில் அண்ணாமலை மீது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரு தினங்களுக்கு முன்பு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது முதல்-அமைச்சரை தொடந்து திமுக எம்.பி. டி.ஆர். பாலுவும் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

நோட்டீஸ் அனுப்பியும் அண்ணாமலை மன்னிப்பு கேட்காததாலும் அடிப்படை ஆதாரமின்றி அவதூறு கருத்துக்களை வெளியிடுவதாகவும் அண்ணாமலை மீது திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 17-வது நீதித்துறை நடுவர் அனிதா ஆனந்திடம் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இதைத்தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

டி.ஆர் பாலு என்மீது வழக்கு தொடர்ந்திருப்பது நகைப்புக்குரியது. என் மீது தொடரப்பட்ட வழக்குகளை சட்டரீதியாக சந்திப்பேன். வழக்குகளுக்கு பயந்து குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை நிறுத்த மாட்டேன். அமைச்சர் டிஆர்பி ராஜாவின் குடும்பத்தினர் பெரிய நிறுவங்களை நடத்தி வருவதால் அவருக்கு தொழில்துறை ஒதுக்கப்பட்ட்யுள்ளது.

பிடிஆர் ஆடியோவை வெளியிட்டது தொடர்பாக என்மீது வழக்கு தொடருங்கள். வழக்கு தொடர்ந்தால் ஆடியோவின் உண்மை தன்மையை நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியும்.

ஆவின் நிர்வாகத்தில் நடைபெற்ற முறைகேடு காரணமாக நாசர் அமைச்சரவையில் இருந்து விடுவிப்பு. பால் விலையை புதிய அமைச்சர் குறைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஆடியோ விவகாரம் தொடர்பாக பிடிஆர் துறை மாற்றப்பட்டது தவறு.

3 தலைமுறையாக மாநில வளர்ச்சிக்கு அர்ப்பணித்து கொண்டது என பிடிஆர் குடும்பத்தை முதல்-அமைச்சர் பாராட்டி உள்ளார். ஆடொயோவில் பிடிஆர் பேசியது உண்மை தான். பிடிஆர் ஆடியோ வெளியிட்டது தொடர்பாக என் மீது வழக்கு தொடருங்கள். வழக்கு தொடந்தால் ஆடியோவின் உண்மை தன்மையை நீதி மன்றத்தில் நிரூபிக்க முடியும்.

ஆவின் நிர்வாகத்தில் நடைபெற்ற முறைகேடு காரணமாக ஆவடி நாசர் விடுவிக்கப்பட்டுள்ளார். பால் விலையை புதிய அமைச்சர் குறைக்க வேண்டும். சாராய உற்பத்திக்காகவே தொழில்துறை டிஆர்பி ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 




Tags:    

மேலும் செய்திகள்