போலீசாரின் ஒத்துழைப்புடன் தான் குற்றவாளிகள் தலைமறைவாகின்றனர்-மதுரை ஐகோர்ட்டு நீதிபதி வேதனை

போலீசாரின் ஒத்துழைப்புடன் தான் குற்றவாளிகள் தலைமறைவாகின்றனர் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி வேதனையுடன் தெரிவித்தார்.

Update: 2022-05-28 19:01 GMT

மதுரை,-

போலீசாரின் ஒத்துழைப்புடன் தான் குற்றவாளிகள் தலைமறைவாகின்றனர் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி வேதனையுடன் தெரிவித்தார்.

முன்ஜாமீன் மனு

அடிதடி வழக்கு, மோசடி, குட்கா விற்பனை, மணல் திருட்டு, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் மதுரை, திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் பதிவான வழக்குகளில் சிக்கிய பலர், தங்களுக்கு முன்ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி பி.வேல்முருகன் முன்பு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, வழக்குப்பதிவு செய்து நீண்ட நாட்கள் ஆகியும் போலீசார் ஏன் இதுவரையில் யாரையும் கைது செய்யவில்லை. கைது செய்யாத காரணத்தினால் தான் அவர்கள் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யும் நிலை ஏற்படுகிறது. இந்த மனுக்கள் தாக்கல் செய்யும் வரை ஏன் கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பினார். பின்னர், சம்பந்தப்பட்ட மனுதாரர்களை உடனடியாக கைது செய்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அதன் அறிக்கையை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

தலைமறைவு

இந்த வழக்கு மீண்டும் அதே நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அனைத்து வழக்குகளிலும் முன்ஜாமீன் கோரிய நபர்கள் தற்போது தலைமறைவாகி விட்டனர் என போலீசார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதி, குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள், முன்ஜாமீன் கேட்டு வக்கீல்கள் மூலம் மனு தாக்கல் செய்கின்றனர். அதுவரை அவர்களை காவல்துறையினர் கைது செய்வதில்லை. தற்போது நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பு குற்றவாளிகள் தலைமறைவாகி விட்டதாக போலீசார் கூறுவது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகின்றது என்றார்.

காவல்துறை ஒத்துழைப்பு

மேலும், குற்றவாளிகள் காவல்துறையின் ஒத்துழைப்போடு தான் தலைமறைவாகின்றனர். காவல் துறைக்கு தெரியாமல் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது. எனவே காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவல் திருப்தி அளிக்கவில்லை. குற்றவாளிகள் காவல்துறைக்கு தெரியாமல் சுதந்திரமாக நடமாட முடியாது. எனவே அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட்டு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து அந்தந்த கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்