குற்றவாளிக் கூண்டில் நிற்கும் துணை வேந்தருக்கு கவர்னர் ஆதரவளிப்பது சட்டவிரோதம் - கே.பாலகிருஷ்ணன்

சட்டப்படி கவர்னர் மீது நடவடிக்கை மேற்கொள்வதற்கு தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Update: 2024-01-12 23:32 GMT

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தில் பூட்டர் அறக்கட்டளை என்ற தனியார் நிறுவனம் தொடங்கி பல முறைகேட்டில் ஈடுபட்டதாக பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இவர் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளும், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் முறைப்படி ஆஜராகாமலேயே இவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. தனக்கு உடல்நிலை சரியில்லை எனவும், ஆஞ்சியோகிராம் சிகிச்சை பெற்றுள்ளதால் நீதிமன்றத்தில் ஆஜராக இயலவில்லை என இவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஆனால், அதேநேரத்தில் பெரியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற கைப்பந்து போட்டியை துவக்கி வைத்து தானும் விளையாடியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆஞ்சியோகிராம் செய்து கொண்டவர் எப்படி கைப்பந்து போட்டியில் விளையாடினார்? நீதிமன்றத்திற்கு வராமலேயே எப்படி ஜாமீன் பெற்றார் போன்ற எண்ணற்ற கேள்விகள் எழும்பியுள்ளது.

இத்தகைய துணைவேந்தரை தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி நேரடியாக சேலம் சென்று பல்கலைக்கழகத்தில் அவரை சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளதுடன் பல்கலைக்கழக துறை தலைவர்களிடம் பேசும்போது துணைவேந்தருக்கு அனைவரும் பக்க பலமாக இருக்க வேண்டும்; அவரை கைது செய்தது ஏற்றுக் கொள்ள முடியாதது, அவருக்கு ஆதரவாக இருப்போம், சட்டப்போராட்டம் நடத்துவோம் அதற்கு நீங்கள் எல்லாம் துணை நிற்க வேண்டுமென பேசியுள்ளதாக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட துணைவேந்தரை நேரடியாக சந்தித்து ஆதரவு தெரிவித்தது மட்டுமின்றி, அவருக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டுமென கவர்னர் தெரிவித்திருப்பது முழுமையான சட்டவிரோத நடவடிக்கையாகும்.

சட்ட வரைமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டிய உயர் பொறுப்பில் உள்ள கவர்னரே கிரிமினல் குற்றமிழைத்துள்ளவருக்கு ஆதரவாக செயல்படுவது ஏற்க முடியாததாகும். இத்தகைய கவர்னரை கண்டித்து அனைத்து ஜனநாயக சக்திகளும் குரலெழுப்ப வேண்டுமெனவும், சட்டப்படி இவர் மீது நடவடிக்கை மேற்கொள்வதற்கு தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்