தெருவில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை அகற்றாமல் சாலை அமைத்த அவலம்

தெருவில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை அகற்றாமல் சாலை அமைக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

Update: 2022-06-28 20:50 GMT

வேலூர்,

வேலூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலை அமைத்தல், பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், அங்குள்ள பேரி காளியம்மன் கோவில் தெருவில் நேற்று முன்தினம் நள்ளிரவில் எவ்வித முன்அறிப்பும் இன்றி திடீரென சிமெண்டு சாலை போடப்பட்டது.

இந்த தெருவில் தங்க நகை செய்யும் கடை வைத்துள்ள யுவராஜ் என்பவர் கடையின் முன்பு இரவில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சென்றார். மறுநாள் காலை பார்த்தபோது மோட்டார் சைக்கிளை அப்புறப்படுத்தாமல் அப்படியே சாலை போடப்பட்டிருந்தது. மோட்டார் சைக்கிளின் இரு சக்கரமும் சிமெண்டு கலவையில் புதைந்திருந்தது. இதனை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

புகைப்படம் வைரல்

மோட்டார் சைக்கிளை அப்புறப்படுத்தாமல் சாலை அமைக்கப்பட்டதை சிலர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இது சிறிதுநேரத்திலேயே வைரலானது.

தகவலறிந்த வேலூர் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து அதனை பார்வையிட்டு சாலையை ஆய்வு செய்தார். தரமற்ற முறையில் சாலை அமைக்கப்பட்டுள்ளதாக வணிகர்கள் குற்றம் சாட்டினர். அதையடுத்து கமிஷனர், சாலை பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரரை செல்போனில் தொடர்பு கொண்டு கண்டித்தார்.

மேலும் அங்கு மீண்டும் தரமாக சாலை அமைக்கும்படி அறிவுறுத்தினார். அதையடுத்து சிறிதுநேரத்தில் மோட்டார் சைக்கிள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, அந்த இடத்தில் சிமெண்டு கலவை கொட்டப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்