ஐ..டி. நிறுவன ஊழியர் கார்கண்ணாடியை உடைத்து திருட்டு
சேலத்தில் ஐ.டி. நிறுவன ஊழியரின் கார் கண்ணாடியை உடைத்து லேப்டாப்- பணத்தை திருடி மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
சூரமங்கலம்:
ஐ.டி. நிறுவன ஊழியர்
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒலவக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் அபிஷேக் (வயது29). இவருடைய மனைவி சாந்தரா. இவர்கள் இருவரும் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். அபிஷேக், மனைவியுடன் கேரளாவில் இருந்து காரில் பெங்களூரு செல்வதற்காக சேலம் வழியாக சென்றார்.
சேலம் மாமாங்கத்தில் உணவு சாப்பிடுவதற்காக காரை நிறுத்திவிட்டு ஒரு ஓட்டலுக்கு கணவன்- மனைவியும் சென்றனர். உணவு சாப்பிட்டு விட்டு திரும்பி வந்து காரை பார்த்தபோது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது.
லேப்டாப் திருட்டு
மேலும் காரில் இருந்த லேப்-டாப் மற்றும் ரூ.12 ஆயிரம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அபிஷேக், சூரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சூரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் சகாயம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கார் கண்ணாடியை உடைத்து லேப்-டாப் மற்றும் பணம் திருடியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பைபாஸ் ரோட்டில் சாலையோரம் நிறுத்தப்படும் கார்களை கண்காணித்து மர்மநபர்கள் கண்ணாடியை உடைத்து கைவரிசை காட்டி வரும் சம்பவங்களால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.