இருவழிச்சாலைக்கு சுங்கச்சாவடி அவசியமா? 'கட்டணம் வசூலித்தால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படுவோம்' பொதுமக்கள், வாகன ஓட்டிகள் குமுறல்

இருவழிச்சாலைக்கு சுங்கச்சாவடி அவசியமா? கட்டணம் வசூலித்தால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவோம் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தங்களின் மனக்குமுறலை வெளிப்படுத்தினர்.

Update: 2022-09-22 19:27 GMT

சாலை விரிவாக்க பணி

திண்டுக்கல்-நத்தம் இடையிலான 38 கிலோ மீட்டர் சாலை சற்று குறுகலாக இருப்பதால் விபத்துகள் அடிக்கடி ஏற்படுகிறது. எனவே சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து மாநில நெடுஞ்சாலைத்துறை சாலையை விரிவு படுத்த முடிவு செய்தது. மேலும் இந்த பணிக்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் ரூ.140 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 2020-ம் ஆண்டு திண்டுக்கல்-நத்தம் இடையிலான 7 மீட்டர் அகலம் கொண்ட சாலையை 10 மீட்டர் அகலம் கொண்ட இருவழி சாலையாக மாற்றும் பணி தொடங்கியது. மேலும் இந்த சாலையில் பல்வேறு இடங்களில் புதிய பாலங்கள், பாதயாத்திரை பக்தர்களுக்கான நடைபாதை, சாலையின் இருபுறமும் மூடியுடன் கூடிய சாக்கடை கால்வாய் ஆகியவை அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்த சாலை விரிவாக்க பணிக்காக நத்தம் சாலையில் இருபுறமும் இருந்த நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன.

கன்னியாபுரம் சுங்கச்சாவடி

சாலை அகலப்படுத்தப்பட்டு வருவதால் திண்டுக்கல், நத்தம் பகுதியை சேர்ந்தவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் அவர்களின் மகிழ்ச்சி நீண்டகாலம் நீடிக்கவில்லை. ஏனென்றால் சாலை விரிவாக்கப்பட்டதோடு கோபால்பட்டியை அடுத்த கன்னியாபுரத்தில் புதிதாக சுங்கச்சாவடி (டோல்கேட்) அமைக்கப்பட்டது. இது பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பேரிடியாக இருந்தது.

சுங்கச்சாவடி அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்ட போதே அப்பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டனர். ஆனாலும் அதிகாரிகள் அதனை கண்டுகொள்ளாமல் சுங்கச்சாவடிக்கான பணிகளை வேகப்படுத்தினர்.

தற்போது திண்டுக்கல்-நத்தம் சாலை விரிவாக்க பணி, சுங்கச்சாவடி கட்டுமான பணி ஆகியவை முடிவடையும் தருவாயில் உள்ளன. இந்த சூழலில் சுங்கச்சாவடியை பயன்பாட்டுக்கு கொண்டு வரக்கூடாது. வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கூடாது. இந்த கட்டணம் தங்களை பொருளாதார ரீதியாக பாதிக்கும் என்று அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் மனு

இதற்கிடையே முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ. மாவட்ட கலெக்டர் விசாகனை நேரில் சந்தித்து கன்னியாபுரம் சுங்கச்சாவடி பிரச்சினை குறித்து பேசினார். அப்போது அந்த சுங்கச்சாவடி பயன்பாட்டுக்கு வந்தால் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

எனவே கன்னியாபுரம் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று கோரி பொதுமக்கள் சார்பில் கலெக்டரிடம் மனு கொடுத்தார். மேலும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்காவிட்டால் கோர்ட்டு மூலம் தடை பெற நடவடிக்கை எடுப்பதோடு, பொதுமக்களை திரட்டி போராட்டமும் நடத்தப்படும் என்றார். இந்த பிரச்சினை குறித்து அரசியல் பிரமுகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-

மாவட்ட கவுன்சிலர் விஜயன் (தி.மு.க.):-

தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் அதிக எண்ணிக்கையில் சுங்கச்சாவடிகள் உள்ளன. அவற்றில் பலவற்றை மூட வேண்டும் என்று மத்திய அரசிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். மேலும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு டெல்லிக்கு சென்று மத்திய மத்திரி நிதின்கட்கரியிடம் தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் பலவற்றை மூட வேண்டும் என்று மனு கொடுத்துள்ளார்.

அதிலும் குறிப்பாக திண்டுக்கல்-தேனி இருவழிச்சாலை, திண்டுக்கல்-நத்தம் இருவழிச்சாலையில் சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த கோரிக்கையை கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோரும் வலியுறுத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி மாநில அரசின் கருத்தை கேட்காமல் சுங்கச்சாவடிகளை திறக்க இயலாது. தமிழக அரசும் அதற்கான அனுமதியை வழங்காது. எனவே பொதுமக்கள் பயப்பட வேண்டாம்.

வீரக்குமார் (டிராவல்ஸ் உரிமையாளர், கன்னியாபுரம்):-

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, சாலைவரி, வாகன உதிரி பாகங்கள் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வாடகை வாகன தொழில் நசிந்து வருகிறது. தமிழகம் முழுவதும் எங்கு வாடகைக்கு சென்றாலும் வாடகை கட்டணத்துடன் சுங்கச்சாவடி கட்டணத்தையும் வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிப்பது பெரும் சுமையாக உள்ளது. இத்தகைய சூழலில் 2 வழி சாலையான திண்டுக்கல்- நத்தம் சாலையில் சுங்கச்சாவடி அமைத்ததே பெரும் தவறு. எனவே கண்டிப்பாக வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூல் செய்யக்கூடாது.

வெள்ளைக்கண்ணன் (ஓன்றிய செயலாளர், மா.கம்யூ):-

சாலைகள் தனியார்மயம் என்பது ஏற்புடையதல்ல. திண்டுக்கல்-நத்தம் சாலை விரிவாக்க பணி 4 வழிச்சாலை அல்ல 2 வழிச்சாலை மட்டுமே. மேலும் அனைத்து விதமான வாகனங்கள் வாங்கும் போதும் வாகன உரிமையாளர்கள் முழுமையாக சாலைவரி செலுத்திய பிறகும் மீண்டும் சாலையில் பயணிக்க சுங்கவரி கட்டணம் வசூலிப்பது தவறு.

சாணார்பட்டி பகுதியில் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழ்மை நிலையில் உள்ள விவசாயிகள் தான். இவர்கள் தாங்கள் சாகுபடி செய்த பொருட்களை மார்க்கெட்டில் விற்பதற்கும், அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காகவும், பிற வேலை விஷயமாகவும் தங்களின் வாகனங்களில் திண்டுக்கல்லுக்கு வருகின்றனர். அவர்களிடம் சுங்கச்சாவடி கட்டணம் வசூலித்தால் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த பிரச்சினை குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பது மத்திய அரசின் முடிவாகும். 4 வழி சாலைகளில் வசூலிக்கும் கட்டணத்தை விட இருவழிச்சாலையில் வசூலிக்கப்படும் கட்டணம் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்