தங்கம் விலை உயர்வுக்கு காரணமா?

தங்கம் விலை உயர்வுக்கு என்ன காரணம் என்பது குறித்து வியாபாரிகள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2023-02-05 18:57 GMT

1920-ம் ஆண்டில் ரூ.21-க்கு விற்பனையான ஒரு பவுன் தங்கம் இன்று ரூ.44 ஆயிரத்தை கடந்துள்ளது. 103 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 96 மடங்கு விலையேறி இருக்கிறது.

திருமணம், கோவில் கொடை விழா மற்றும் விசேஷ நிகழ்வுகளில் தங்க நகைகள் அணிவதை பலரும் கவுரவமாக கருதுவதால் அதன் மீதான மோகம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் அதன் விலை தொடர்ந்து உயர்வை கண்டாலும் மவுசு மட்டும் குறைவது இல்லை. ஒவ்வொரு ஆண்டும் தங்கம் விலை புதிய உச்சம் தொட்டு வரலாற்றில் இடம் பிடித்து வருகிறது.

பதுக்கல்

இந்த சூழலில் மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்வு அறிவிப்பு வெளியான உடனேயே உள்நாட்டில் தங்கத்தை மொத்த வியாபாரிகள் அதிகளவில் பதுக்கி இருக்கலாம் என்று பரபரப்பு வெளியாகி உள்ளது. இதன் எதிரொலியாக தங்கம் விலை எகிறியுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு பவுன் தங்கம் ரூ.50 ஆயிரத்தை கடப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி இல்லத்தரசிகளை கதிகலங்க செய்துள்ளது.

தங்கம் விலை 'ராக்கெட்' வேகத்தில் உயர்ந்து வரும் வேளையில் வியாபாரிகள், இல்லத்தரசிகள் அதுபற்றி தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

கடத்தலுக்கு வழிவகுக்கும்

தமிழ்நாடு தங்க நகை வியாபாரிகள் கூட்டமைப்பின் முக்கிய ஆலோசகர் எல்.கே.எஸ். சையது அகமது:-

பெண்கள் தங்க ஆபரணங்கள் அணிவது பாரம்பரிய கலாசாரமாக தொன்று தொட்டு இருந்து வருகிறது. உள்நாட்டில் தங்க உற்பத்தி இல்லை என்றாலும் வெளிநாட்டில் இருந்து ஆண்டுக்கு தோராயமாக 600 டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்கான இறக்குமதி சுங்க வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வந்தோம். ஆனால் மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி வரியை குறைப்பதற்கு பதிலாக உயர்த்தி இருப்பது வேதனைக்குரியது. தங்கம் விலை அதிகரிப்பு சட்டவிரோத கடத்தலுக்கு வழிவகுத்து விடும்.

தற்போது தங்க நகை உயர்வு திருமண வீட்டாரை கஷ்டத்திலும், கவலையிலும் ஆழ்த்தி உள்ளது. எனவே மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும். எங்கள் கோரிக்கையை ஏற்று வரியை குறைக்க வேண்டும்.

இந்த கோரிக்கையை நிறைவேற்றினால் தமிழ்நாட்டு பெண்களின் அன்பும், ஆதரவும் அவருக்கு கிடைக்கும்.

பங்குச்சந்தை

விருதுநகரை சேர்ந்த நகை வணிகர் கண்ணன்:-

கொரோனா பாதிப்பினையொட்டி நகை கடைகள் செயல்படாமல் இருந்த நிலையில் நகை கடைகள் திறந்தவுடன் தங்கத்தின் விலை கிராம் ரூ.5 ஆயிரத்தை தாண்டியது. பின்னர் ரூ.5 ஆயிரத்திற்கும் கீழ் வந்தது. தற்போது கடந்த மாதம் கிராம் ரூ.4,800 முதல் ரூ.4,900 வரை இருந்த அந்த நிலையில் தங்கத்தின் இறக்குமதிக்கான வரி உயர்வு காரணமாக தங்கத்தின் விலை திடீரென உயர்ந்தது.

ஆனாலும் விலை உயர்வால் விற்பனை பாதிப்பு காரணமாக தற்போது மீண்டும் விலை குறைந்துள்ளது. உலக சந்தையிலும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ள காரணத்தால் இந்தியாவிலும் தங்கத்தின் விலை அதிகமாகத்தான் உள்ளது. விலை உயர்வால் விற்பனை பாதிப்பு ஏற்படும் நிலையில் விலை குறைகிறது. இனியும் தங்கத்தின் விலை திடீர் உயர்வுக்கு வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது. பங்குச்சந்தையில் ஏற்பட்ட தாக்கம் காரணமாகவும், தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படும் நிலை உள்ளது.

முகூர்த்த நாட்கள்

வத்திராயிருப்பை சேர்ந்த இல்லத்தரசி சங்கரேஸ்வரி:- தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு விண்ணை தொடும் அளவிற்கு செல்கிறது. தற்போது ஒரு பவுன் விலை 45 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

இந்தநிலையில் தற்போது முகூர்த்த நாட்கள் உள்ளதால் இன்னும் தங்கத்தின் விலை பல மடங்கு உயர வாய்ப்புள்ளது. இதனால் கல்யாணம் வைத்துள்ள பெண் வீட்டார்கள் மணப்பெண்ணிற்கு நகை எடுப்பதில் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். தங்கத்தின் விலை ஒரே ஏறுமுகமாக சென்று கொண்டே இருந்தால் பெண் வீட்டார்கள் மணப்பெண்ணிற்கு நகை போடுவது என்பது எட்டாக்கனியாகி விடும். நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூட தனது பெண்ணிற்கு தற்போது உள்ள சூழ்நிலையில் நகை எடுத்து திருமணம் முடிக்க முடியாத நிலையில் தான் உள்ளனர். எனவே தங்கத்தின் விலை சற்று குறைந்தால் சாமானிய மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் கனவுகள் நிறைவேறும்.

வரதட்சணை

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த முதுகலை பட்டதாரி மாணவி தாரணி:-

உலக பொருளாதாரத்தில் தங்கம் மிக முக்கியமானதாக உள்ளது. தங்கம் மீதான முதலீடுகள் அதிகரிப்பதால் தங்கத்தின் விலை உயர்வு அதிகரிக்கிறது. உலக பொருளாதாரத்திலும், இந்திய பங்குச்சந்தையிலும் பங்குகள் விலை வீழ்ச்சியே தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

இதேநிலைமை நீடித்தால் தங்கம் இன்னும் 3 ஆண்டுகளில் ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்தை நெருங்கி விடும். தங்கம் சாமானியர்களுக்கு எட்டாக்கனியாக இருக்கும். வரும் காலங்களில் பெண்கள் தங்கத்தின் மீது உள்ள மோகத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். வரதட்சணையாக தங்கம் வாங்குவது குறைக்கப்பட்டால் தங்கத்தின் விலை வெகுவாக குறைவதற்கு வாய்ப்பு இருக்கும்.

நடுத்தர வர்க்கத்தினர் அச்சம்

மேலதாயில்பட்டி இல்லத்தரசி மீனா:-

எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த எங்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் நகை வாங்குவதற்காக குறிப்பிட்ட தொகை சேமித்து வருகிறோம். இந்தநிலையில் பட்ஜெட்டில் புதிய வரிகாரணமாக தங்க நகைகளின் விலை உயர்ந்துள்ளதால் மிகவும் வேதனை அடைந்துள்ளோம். தங்க நகை வாங்கும் எங்களுடைய கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என அச்சத்தில் உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்