தமிழக அரசு வழங்க இருப்பது பொங்கல் பரிசு தொகுப்பா? ரொக்கப் பணமா?

பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி மாதம் 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் திருநாளான அன்று, இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கும், பெரியவர்கள் இளையவர்களுக்கும் பொங்கல்படி கொடுத்து வாழ்த்துவது வழக்கமாக இருந்துவருகிறது. திருமணமாகி புகுந்த வீட்டுக்கு சென்ற பெண்ணுகளுக்கு தாய் வீடுகளில் இருந்து பொங்கல் பொருட்களுடன், கரும்பு, மஞ்சள், கிழங்கு என பொங்கல்படி அனுப்பி வைப்பது உண்டு.

Update: 2022-12-20 18:16 GMT

பொங்கல் பரிசு

அதுபோல் தமிழக அரசு சார்பில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 2009-ம் ஆண்டு அறிமுகம் செய்தார். ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் அரைக்கிலோ பச்சரிசி, வெல்லம், 20 கிராம் முந்திரி, திராட்சை ஆகிய பொருட்கள் அடங்கிய பரிசுப்பை அப்போது வழங்கப்பட்டது.

2011-ம் ஆண்டு வரையில் பொங்கல் பரிசுப்பை திட்டம் நடைமுறையில் இருந்தது. ஆட்சி மாறியதும் 2012-ம் ஆண்டு பொங்கல் பரிசுப்பை வழங்கப்படவில்லை. 2013-ம் ஆண்டு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரையுடன் பொங்கலுக்கு தேவையான முந்திரி, திராட்சை போன்ற பொருட்கள் வாங்குவதற்கு ரூ.100 ரொக்கப்பணம் மற்றும் கரும்பு ஆகிய தொகுப்புகளுடன் இந்தத் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா விரிவுப்படுத்தினார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக இருந்த நேரத்தில் 2017-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது பரிசு தொகுப்பு மட்டும் வழங்கப்பட்டது. ரூ.100 ரொக்கப்பணம் நிறுத்தப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி முதல்-அமைச்சர் ஆனபிறகு 2018-ம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

இன்ப அதிர்ச்சி

2019-2020 ஆகிய ஆண்டுகளில் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப்பணம் வழங்கப்பட்டது. 2021-ம் ஆண்டு மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2 ஆயிரத்து 500 பணம் கொடுக்கப்பட்டது. அப்போது சட்டசபை தேர்தல் நடைபெற இருந்ததால் பொங்கல் கவனிப்பு பலமாக இருந்ததாக விமர்சனங்களும் எழுந்தன.

2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைந்ததும், குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, ரவை, கோதுமை, உப்பு மற்றும் மஞ்சள் பை, முழு கரும்பு ஆகிய 21 பொருட்களுடன் பொங்கல் பரிசு தொகுப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவுப்படுத்தினார்.

கசப்பான அனுபவம்

இந்த பொங்கல் தொகுப்பில் வெல்லம், பச்சரிசி போன்ற பொருட்களின் தரம் குறைவாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. அதன் எதிரொலியாக தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் முதுநிலை தரக்கட்டுப்பாட்டு மேலாளர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஏற்பட்ட கசப்பான அனுபவம் இந்த ஆண்டில் நடந்துவிடக்கூடாது என்பதற்காக வரும் பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்புக்கு பதிலாக ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கும் மனநிலையில் தமிழக அரசு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுவரையில் தமிழக அரசு சார்பில் கரும்பு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படாததால் அந்த தகவலில் உண்மை இருக்கலாம் என்று தெரிகிறது.

இந்த நிலையில் பொங்கல் பரிசு வழங்குவது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இருக்கிறது.

மக்கள் மனநிலை

அதே நேரத்தில் பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்பு கிடைக்குமா? ரொக்க பணம் கிடைக்குமா? அல்லது இரண்டும் சேர்ந்து கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மனதில் எழுந்து இருக்கிறது. இதுபற்றி பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துகளை பதிவு செய்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

செலவுக்கு உதவும்

கைக்குறிச்சியை சேர்ந்த ஸ்ரீதேவி:- ''பொங்கல் பரிசு தொகுப்பினை பொருட்களாக வழங்குவதை விட பணமாக வழங்கினால் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். பொருட்களாக வழங்கப்படும் போது அவற்றின் தரம் போதுமானதாக இல்லை. கடந்த முறை கொடுத்த பொருட்களின் நிலைபற்றி அனைவருக்கும் தெரிந்தது தான். முந்திரி, பச்சரிசி, வெல்லத்தின் தரம் சரியாக இல்லை. அதனால் பணமாக கொடுத்தால் நன்றாக இருக்கும்.

இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.1,000 வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதில் தேவையான பொருட்களை வாங்கி கொள்ள முடியும். ஏழை, எளிய மக்கள், கிராமப்புறத்தில் அன்றாடம் தினக்கூலிக்கு செல்லக்கூடிய மக்களுக்கு இந்த பரிசு தொகுப்பு பணம் அவர்களுக்கு பொங்கல் பண்டிகையோடு ஒரு வார செலவுக்கு உதவும் வகையில் அமையும். மனநிறைவோடு பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியும்''.

தரமில்லை

விராலிமலையை சேர்ந்த மணிமாலா:-

கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசுதொகுப்புடன் பணமும் வழங்கப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. ஆட்சியில் பொங்கல் பரிசு தொகுப்போடு ரூ.2,500 வழங்கப்பட்டது. இது எனக்கு மட்டுமின்றி பொதுமக்கள் பலருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு பணம் இல்லாமல் பொங்கல் பரிசு தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது அதிருப்தியாக இருந்தது. அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு கொடுத்த பொங்கல் பரிசு தொகுப்பில் இருந்த சில பொருட்கள் தரமில்லாமல் இருந்தது என ஆங்காங்கே பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். எனவே இந்தமுறை 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்புக்கு பதிலாக ரொக்கமாக வழங்கினால் நன்றாக இருக்கும்.

வெயிலில் காய்ந்து வீணாகிறது

கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த தமீமுல் அன்சாரி:- தமிழக அரசு பொங்கல் பரிசாக கொடுக்கக்கூடிய பொருட்கள் முறையாக பொதுமக்களுக்கு சென்று அடைவதில்லை குறிப்பாக கரும்பு, மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொருட்கள் வெயிலில் காய்ந்து வீணாய் போகிறது. எனவே பொங்கல் பண்டிகைக்கு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு அதற்குரிய தொகையை வழங்கினால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

பணமாக வழங்கலாம்

ஆலங்குடியை சேர்ந்த வடிவேல்:- தமிழக அரசு பொங்கல் தொகுப்பு பரிசு பொருட்களை கடந்த சில ஆண்டுகளாக வழங்கி வருகிறது. இத்திட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றாலும் ஏழை, எளிய மக்களுக்கு கிடைப்பதில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. எனவே ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் பணமாக ரேஷன் கடைகள் அல்லது வங்கியில் வழங்கினால் அவர்கள் விருப்பம் போல் பொங்கல் பரிசுகளை கடைகளில் தரமான பொருட்களை பெற்றுக்கொள்வார்கள்.

தேங்காய்

அறந்தாங்கி அருகே விஜயபுரத்தை சேர்ந்த ரேவதி:- தமிழக அரசு சார்பில் கடந்த ஆண்டு வழங்கிய பொங்கல் தொகுப்பில் அரிசி, வெல்லம் உள்ளிட்டவை தரமாக வழங்கவில்லை. எனவே இந்த ஆண்டு தரமான பொருட்களை மட்டுமே வழங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த பொருட்களுடன் தேங்காய் ஒன்று வழங்க வேண்டும். இதேபோல் ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும்.

வெளிமாநிலத்தில் கொள்முதல் செய்ததால் குளறுபடி

தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்:-

பொங்கல் பண்டிகை என்பது உழவர் திருநாள். விவசாயிகளுக்கும், கால்நடைகளுக்கும் உகந்த பண்டிகை ஆகும். புத்தரசியில் பொங்கலிட்டு வேளாண்மை சார்ந்த உற்பத்தி பொருட்களையே வணங்குகிறோம். எனவே தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு, அரிசி போன்ற வேளாண்மை சார்ந்த பொருட்கள் இடம் பெற்றன. ஆனால் கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புக்கான பொருட்களை வெளிமாநிலத்தில் கொள்முதல் செய்ததால் குளறுபடி, முறைகேடுகள் அரங்கேறின.

இதனை காரணமாக காட்டி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்புக்கு பதிலாக ரொக்க பணமாக தர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது ஏற்புடையது அல்ல. தரமற்ற பொருட்களை கொள்முதல் செய்துவிட்டு விவசாயிகள் மீது குறை சொல்லி தப்பிக்க பார்க்க கூடாது. எனவே ரொக்க பணம் வழங்குவதற்கு பதிலாக பரிசு தொகுப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

ரேஷன் அட்டை வைத்துள்ள பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன், ரூ.1,000 ரொக்க பணமும் சேர்த்து வழங்க வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் எதிர்பார்க்க இருக்கிறது. ஓரிரு நாட்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தித்திப்பான அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்