வால்பாறையில் வெள்ளமலைடனல் பாலம் உறுதி தன்மையோடு உள்ளதா?- அதிகாரிகள் ஆய்வு செய்ய சுற்றுலா பயணிகள் கோரிக்கை

வால்பாறையில் வெள்ளமலைடனல் பாலம் உறுதி தன்மையோடு உள்ளதா? என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2022-06-01 13:07 GMT

வால்பாறை

வால்பாறையில் வெள்ளமலைடனல் பாலம் உறுதி தன்மையோடு உள்ளதா? என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

வெள்ளமலைடனல் பாலம்

வால்பாறை பகுதியில் வெள்ளமலை எஸ்டேட்டில் அமைந்துள்ள வெள்ளமலைடனல் தண்ணீர் செல்லும் வழியில் இரும்பு பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் மேல் நீரார் அணை அமைக்கப்பட்ட சமயத்தில் 1961-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது.

ஆரம்ப காலத்தில் அந்த இடத்திற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் வெள்ளமலை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த தொழிலாளை தவிர வேறு யாரும் செல்வதில்லை. இந்த நிலையில் வால்பாறை பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் இந்த வெள்ளமலைடனல் பகுதியில் மழைக்காலங்களில் தோன்றும் திடீர் அருவிகளில் குளிப்பதற்காக அதிகளவிலான சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர்.

உறுதி தன்மை உள்ளதா?

மேல்நீரார் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு அந்த தண்ணீரை சுரங்க கால்வாய் என்று சொல்லக்கூடிய டனல் வழியாக வெளியேற்றி வெள்ளமலை ஆற்றின் வழியாக சோலையாறு அணைக்கு தண்ணீர் செல்கிறது. தற்போது வெள்ளமலைடனல் பகுதியில் இருக்கும் இரும்பு பாலத்தின் மீது அதிகளவில் சுற்றுலா பயணிகள் நடந்து சென்று அங்கு உருவாகியிருக்கும் திடீர் நீர் வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்னால் அமைக்கப்பட்ட இந்த பாலம் முழுமையான பராமரிப்பு இல்லாமல் இருந்து வருகிறது.

இதுகுறித்து தெரியாத நிலையில் இந்த இரும்பு பாலத்தின் மீது அதிகளவில் சுற்றுலா பயணிகள் நடந்து சென்று புகைப்படம் எடுப்பது, செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பாலத்தின் பக்கவாட்டில் உள்ள கம்பிகள் நடந்து செல்லும் போது அதிர்கிறது.

ஆய்வு செய்ய வேண்டும்

எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த பாலத்தின் உறுதித் தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாலத்தை பராமரிப்பு செய்ய வேண்டும். தவறு பட்சத்தில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் பாலத்தின் மீது நடந்து செல்லும் போது ஆபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே பாலத்தின் உறுதி தன்மையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்