ஆன்லைன் ரம்மி அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டா ? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி

தமிழக அரசின் சட்டம் ரம்மியை அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டாக எப்படி வகைப்படுத்தியது?என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.

Update: 2023-08-17 15:24 GMT

சென்னை,

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த வழக்கு கடந்த 7ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில்,

இந்த விளையாட்டு பொது ஒழுங்கிற்கு இடையூறு ஏற்படுத்துவதால் அரசாங்கம் தடை விதித்துள்ளது. இது அரசாங்கத்தின் கொள்கை ரீதியான முடிவு. ரம்மி விளையாட்டை நேரில் விளையாடும் போதுதான் அதை திறமைக்கான விளையாட்டாக கருத முடியும். இந்த விளையாட்டை வடிவமைத்த தொழில்நுட்ப வல்லுனர்கள் இதில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துகின்றனர். விளையாடுவோரின் சுய அறிவிப்பு எப்படி சரி பார்க்கப்படுகிறது என இந்த நிறுவனங்கள் விளக்குவதில்லை.என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, "ரம்மியை திறமைக்கான விளையாட்டு என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ள நிலையில்,தமிழக அரசின் சட்டம் ரம்மியை அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டாக எப்படி வகைப்படுத்தியது?" என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.

அதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், , ரம்மியை நேரடியாக விளையாடும் போது தான் அது திறமைக்கான விளையாட்டு என விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், ஆன் லைனில் ரம்மியை விளையாடினால், அது அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டாக மாறும் என்பதை ஏற்க இயலாது எனக் கூறினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்விசாரணையை வரும் 21-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்