வலி இல்லாமல் மரண தண்டனை சாத்தியமா?

நமது நாட்டில் கொடூரமான குற்ற வழக்குகளில் அரிதிலும் அரிதாகத்தான் மரண தண்டனை வழங்கப்படுகிறது. மரண தண்டனையை எப்படி வழங்க வேண்டும் என்று ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. கழுத்தில் கயிற்றைக் கட்டி தூக்கிலிட வேண்டும் என்றும், இதுதான் குறைவான வலியுடன் மரணத்தைத் தரக்கூடியது என்றும் முடிவு செய்து 1888 மற்றும் 1898-ம் ஆண்டுகளிலும், நாடு விடுதலைக்கு பின்னர் 1973-ம் ஆண்டிலும் குற்றவியல் விசாரணை முறை சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. விஷ ஊசி போடுவது, மின்சாரம் பாய்ச்சுவது, விஷவாயு அறைக்குள் வைத்து பூட்டுவது போன்ற முறையில் மரண தண்டனையை நிறைவேற்றுவது அதிக வலியை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் அறிக்கைகள் தெளிவாக கூறுகின்றன.

Update: 2023-03-28 18:39 GMT

குறைவான வலியுடன் மரண தண்டனை

1983-ம் ஆண்டு தீனதயாள் வழக்கில், தூக்கில் போட்டு மரண தண்டனையை நிறைவேற்றுவதே வலியில்லா மரணத்தை ஏற்படுத்தும் முறை என்றும் சுப்ரீம் கோர்ட்டு தெளிவுபடுத்தி உள்ளது.

ஆனால், விருத்தாசலம் சிறுவன் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற சுந்தர்ராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அவரது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி உத்தரவிட்டது.

அந்த வழக்கில், மரண தண்டனை நிறைவேற்றுவது குறித்து கருத்துகளை சுப்ரீம் கோர்ட்டு பதிவு செய்துள்ளது.

தூக்கில் போடும்போதும் சில நொடிகள் துடிதுடித்துத்தான் சம்பந்தப்பட்ட நபர் மரணம் அடைகிறார். மரணத்தில் கண்ணியம் காக்கப்பட வேண்டும். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்துள்ள இந்த காலகட்டத்தில் குறைவான வலியுடன் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும். அதுகுறித்து மத்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.

அதே கருத்துப்பட கடந்த 21-ந் தேதியும் ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு யோசனை கூறி இருக்கிறது. டெல்லியை சேர்ந்த வக்கீல் ரிஷி மல்கோத்ரா என்பவர் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்து இருந்தார்.

மரண தண்டனையை வலி இல்லாமல் நிறைவேற்ற மாற்று வழிகளை கையாள வேண்டும் என்று அதில் வலியுறுத்தி இருந்தார்.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு அந்த மனுவை விசாரித்தது.

மனுதாரரின் கருத்தோடு நீதிபதிகள் உடன்பட்டதுடன், "தூக்கிலுடுவதற்கு மாற்றாக நமது நாட்டிலோ அல்லது வெளிநாடுகளிலோ ஏதேனும் தரவுகள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய, தேசிய சட்ட பல்கலைக்கழக நிபுணர்கள், எய்ம்ஸ் மருத்துவர்கள், விஞ்ஞானிகள் அடங்கிய ஒரு குழுவை நியமிக்கலாம்" என்றும் மத்திய அரசுக்கு சிபாரிசு செய்து இருக்கிறது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த கருத்து குறித்து முன்னாள் நீதிபதி, வக்கீல்கள், பொதுமக்கள் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

வலி இருக்கும்

ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி டி.அரிபரந்தாமன்:-

மரண தண்டனையே வேண்டாம் என்பதுதான் எங்களது கருத்து. வளர்ந்த நாடுகளில் மரண தண்டனை முற்றிலும் நீக்கப்பட்டு விட்டது. இப்போது பார்க்கும்போது, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பகத்சிங் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டு சாதாரணமானதுதான். அதேநேரம், பில்கிஸ் பானு வழக்கில் கற்பழிப்பு, கொலை என்று கொடூரமான குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்கள் குறைவான தண்டனையுடன் 14 ஆண்டுகளுக்கு பின்னர் வெளியில் வந்துவிட்டனர்.

எனவே, பண்டைய காலம் போல் மரண தண்டனை எளிதாக விதிக்கப்படுவது இல்லை என்றாலும் தவறு செய்பவன் திருந்த வேண்டும். அதற்கு ஏற்ப தண்டனை இருக்க வேண்டும். குற்றத்தை குறைப்பதற்கான காரணிகளை அரசு ஆய்வு செய்ய வேண்டும். மரண தண்டனை விதிப்பதால் குற்றங்கள் குறையவில்லை. இதனால்தான் வளர்ந்த நாடுகள் மரண தண்டனை வேண்டாம் என்கிறது. அதுபோன்ற கோரிக்கை நம் நாட்டில் வலுக்கவில்லை என்பதால், தண்டனையை நிறைவேற்ற மாற்று வழிகளைத் தேட வேண்டியதுள்ளது. எனவே, மரண தண்டனை வேண்டுமா? வேண்டாமா? என்பதை நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். மரணம் என்பதை எந்த வழிகளில் நிறைவேற்றினாலும் வலி இருக்கத்தான் செய்யும்.

மரண தண்டனை அவசியம்

முன்னாள் உதவி சொலிசிட்டர் ஜெனரல் மூத்த வக்கீல் ஜி.கார்த்திகேயன்:- கொடூரமான குற்ற வழக்குகளில் அரிதிலும் அரிதாகத்தான் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. எதற்காக இந்த தண்டனை வழங்கப்படுகிறது என்பதைத்தான் பார்க்க வேண்டும். கொடூரமான எண்ணங்கள் கொண்டு, கொடூரமாக கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட கடும் குற்றங்களை செய்பவன் திருந்தவே மாட்டான். அவன் ஒழுக்கமான, அமைதியான சமுதாயத்தில் வாழ தகுதியில்லாதவன். மனநோயாளியான அவனால் பிறருக்கு துன்பம் வரும், ஆபத்து வரும் என்று கருதும்பட்சத்தில் திருந்தாத அந்த நபருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. கொடூரக் குற்றத்துக்கு இந்த தண்டனை அவசியம்.

மரண தண்டனையை தூக்குப்போட்டு நிறைவேற்றுவது வலி குறைவானது என்று முன்பு கருதப்பட்டது. ஆனால், இப்போது தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. தலீபானைப்போல் குற்றவாளியின் பின்தலையில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லலாம். விடுதலைப்புலிகள் தற்கொலை படையினர் ஒருகாலத்தில் பயன்படுத்தியது போல, ஒரு நொடியில் மரணம் அடையும் சயனைடை பயன்படுத்தலாம். சயனைடு ஊசி போட்டு மரண தண்டனையை நிறைவேற்றலாம். இவையெல்லாம் குறைவான வலியுடன், சில நொடிகளில் மரணத்தைத் தரக்கூடியதுதான். வளர்ந்த நாடுகளை ஒப்பிடுவதை தவிர்த்துவிட்டு, நம் நாட்டில் மரண தண்டனை அவசியம் வேண்டும்.

மிகப்பெரிய அநீதி

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்து விடுதலையான நளினி:- சுப்ரீம் கோர்ட்டின் இந்த கருத்தை முழு மனதாக வரவேற்கிறேன். இதுநாள் வரை ஆயுதங்களையோ, துப்பாக்கி ரவையையோ நான் பார்த்தது கூட கிடையாது. ஆனால், சர்வதேச பயங்கரவாதி போல் நடத்தப்பட்டேன். சி.பி.ஐ., கூறும் குற்றச்சாட்டுகளை எல்லாம் அப்படியே ஏற்றுக்கொண்டு தூக்கு தண்டனை கொடுத்தார்கள். அதன்படி தூக்கில் போட்டு இருந்தால் மிகப்பெரிய அநீதி ஏற்பட்டு இருக்கும்.

இப்போது என் கணவர் முருகன் என்ற ஸ்ரீஹரன், சாந்தன் உள்ளிட்டோர் உயிரோடு இருக்கின்றனர். அவர்களை பார்த்து அவர்களது உறவினர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். எங்களை பொறுத்தவரை மரண தண்டனை ஒரு கொடூரமானது. அதை ஒழிக்க வேண்டும்.

இப்போது, சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ள கருத்தை பார்க்கும்போது, மரணம்கூட குறைவான வலியுடன் நிகழவேண்டும் என்று கருதுகிறது. இதன்மூலம் அந்த நீதிபதிகளின் மென்மையான உணர்வுகள் வெளிப்படுகின்றன.

நல்ல முடிவு வரும்

தூக்கில் தொங்கும்போது சில நொடிகள் துடிப்பதுகூட அதிக வலி என நினைக்கின்றனர். இதைவிட குறைவான வலி தொழில்நுட்பத்தில் உள்ளதா என்று கேட்கின்றனர். நீதிபதிகளின் இந்த கேள்வியின்படி, ஆய்வு செய்ய ஒரு குழுவை மத்திய அரசு நியமித்தால், கண்டிப்பாக அதில் இடம் பெறுவோர் மரண தண்டனை வேண்டாம் என்ற முடிவுக்குத்தான் வருவர்.

இன்றைய காலக்கட்டத்தில் மரண தண்டனை வேண்டாம் என்றுதான் பெரும்பாலானவர்கள் நினைக்கின்றனர். அதனால், இதில் நல்ல முடிவு வரும் என்று எனக்கு தோன்றுவதால், சுப்ரீம் கோர்ட்டின் கருத்தை வரவேற்றுள்ளேன்.

கொடூர குற்றங்கள் குறையும்

புதுக்கோட்டையை சேர்ந்த வக்கீல் திரவிய ராணி:- மரண தண்டனை என்பது தூக்கு மூலம் நிறைவேற்றப்படுவது தான் சரியாக இருக்கும். கொடூர குற்றச்செயல்களை தடுக்க தான் மரண தண்டனை என்பது வழங்கப்படுகிறது. இந்த தண்டனையை குற்றவாளிக்கு வலியில்லாமல் நிறைவேற்றுவது என்பது சரியாக இருக்காது. துப்பாக்கியால் சுடுவது கொலை குற்றமாகிவிடும். விஷ ஊசி போடுவது என்பது கருணை கொலை என்ற அடிப்படையில் வந்துவிடும். அதனால் மரண தண்டனையை தூக்கில் மூலம் நிறைவேற்றப்படும் போது துடி, துடிக்க ஒருவர் மனதில் வலியுடன் அந்த தண்டனையை அடைவார். அந்த தண்டனை ஒன்று இருப்பதால் தான் கொடூர குற்றங்கள் குறையும். வலியில்லாமல் ஒருவருக்கு மரண தண்டனை வழங்குவது என்பது அது தண்டனையாக இருக்காது.

புதுக்கோட்டையை சேர்ந்த போலீஸ் அதிகாரி:- குற்றவாளியின் குற்றத்திற்கு ஏற்ப மரணதண்டனை விதிக்க வேண்டும். சிறுமியை கற்பழிப்பது போன்ற குற்றங்களுக்கு தலையை வெட்டுவதும், கொடூர கொலைக்கு தூக்கு என்பது போல் மரண தண்டனைகள் இருக்க வேண்டும். அப்போதுதான் குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது. ஏனென்றால் பாதிக்கப்பட்டவர் அந்த வேதனையை எந்த வகையில் அனுபவித்திருப்பார் என்று குற்றவாளிக்கு உணர்த்தும் வகையில் தண்டனை இருக்க வேண்டும். ஊசி போட்டு இறப்பை ஏற்படுத்துவது என்பது மிக மென்மையான போக்காக உள்ளது.

தூக்கிடும் முறை சரியானதே

புதுக்கோட்டை மாவட்ட சிறை அதிகாரி:- இந்தியாவில் விதிக்கப்படும் அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை உள்ளது. இந்த முறையை மாற்றி அமெரிக்காவில் உள்ளது போல் ஊசி செலுத்தி இறப்பை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிப்பது ஏற்றுக்கொள்ள கூடியது தான். ஆனால் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் குற்றவாளிகைள தூக்கிட்டும், துப்பாக்கியால் சுட்டும், தலையை துண்டித்தும் இறப்பை ஏற்படுத்துவது போன்ற முறைகள் உள்ளன. இதை வைத்து பார்க்கும் போது இந்தியாவில் உள்ள தூக்கிடும் முறை சரியானதே.

மரண தண்டனை கூடாது

இலுப்பூரை சேர்ந்த வனஜா:- மரண தண்டனையை வலியில்லாமல் நிறைவேற்றுவது என்பது இயலாத காரியம். தற்போது உலகில் உள்ள பல்வேறு நாடுகள் மரண தண்டனையை எதிர்த்து மரண தண்டனையே இருக்க கூடாது என்றும், அது இயற்கைக்கு எதிராக உள்ளது என அதனை நீக்கி விட்டனர். ஆனால் நம் நாட்டில் மட்டும் மரண தண்டனை நிறைவேற்றி வருகின்றனர். நம் நாட்டிலும் மரண தண்டனையை இந்திய தண்டனை சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும். அகிம்சையை விரும்பக்கூடிய புத்தர், காந்தி பிறந்த நம் நாட்டில் இனி மரண தண்டனை என்பது இருக்கவே கூடாது.

எந்த வகையில் நியாயம்

கீழப்பனையூர் கிராமத்தை சேர்ந்த பழனியப்பன் ராமசாமி:- ஒரு மனிதனை வலியில்லாமல் கொல்வது என்பது சாத்தியம் இல்லாத ஒரு காரியம். அவ்வாறு செய்யும்போது அவர் உயிர் பிழைத்து விட்டால் அவருக்கு மீண்டும் தண்டனை வழங்க இயலாது. இதனால் அவர் தண்டனையிலிருந்து தப்பிக்க அதிக வாய்ப்பு உண்டு. ஒரு மனிதனின் மரணத்தை ஒரு முறை தான் நிறைவேற்ற வேண்டும் என அரசியல் சாசன அமைப்பு அறிவித்து உள்ளது. வலி இல்லாமல் மரண தண்டனையை நிறைவேற்றும் போது குற்றவாளி எவ்வாறு திருந்துவான். அதைப்பார்த்து அதிகளவு குற்றச்சம்பவங்களில் பலர் ஈடுபட வாய்ப்பு ஏற்படும். நம் நாட்டில் சிறிய குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்படுவதில்லை. மிகப்பெரிய கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மட்டுமே தூக்கு தண்டனை வழங்கப்படுகிறது. அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்குவது நியாயம் தான். குற்றவாளிகள் கூட்டு பாலியல், வன்கொடுமை மற்றும் கூட்டு துன்புறுத்தலில் ஈடுபடும்போது பாதிக்கக்கூடிய நபர் எவ்வாறு வலியையும், வேதனையும் சந்தித்திருப்பார். அதுபோன்று ஈவு இரக்கமின்றி குற்றச்செயல்களில் ஈடுபடும் இந்த குற்றவாளிகளுக்கு வலியில்லாமல் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தூக்கில் போடுவதால் வலியை உணரமுடியாது- ஓய்வுபெற்ற சிறைத்துறை டி.ஐ.ஜி. கோவிந்தராஜன்

வீடுகளில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்வதற்கும், ஜெயிலில் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கும் வித்தியாசம் உள்ளது. வீட்டில் தூக்குப்போட்டு ஒரு நபர் தற்கொலை செய்து கொள்ளும்போது, மூச்சுக்குழாயில் காற்றுபுகாமல் அடைப்பட்டு மூச்சுத்திணறி இறக்க நேரிடும். ஆனால் ஜெயிலில் தூக்கு தண்டனையை நிறைவேற்றும்போது, அங்கு மேற்கொள்ளப்படும் சில நடைமுறைகள் காரணமாக, முதலில் அந்த நபரின் மூளைக்கு செல்லும் தண்டுவட எலும்பை துண்டித்துவிடக்கூடும். இதனால் உடலின் வலியை மூளை உணராது. அது ஒரு சில வினாடிகளில் நடைபெற்று விடும். அதனால் தான் தூக்கில் போட்டு மரண தண்டனையை நிறைவேற்றுவதில் வலி குறைவாக இருக்கும்.

மரண தண்டனையை நிறைவேற்றுவது என்பது வேதனைக்குரிய விஷயம் தான். ஆனால் சட்டப்படி அதை செய்துதான் ஆக வேண்டும். ஒருவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டால் சாகும் வரை தூக்கிலிட வேண்டும் என்பதுதான் விதிமுறை. அதனால் தூக்கிலிடப்படும் ஒருவர் இறக்கும் வரை சுமார் அரை மணி நேரம் கயிற்றில் தொங்கவிடப்படுவார். அதன்பிறகு டாக்டர் அவரை பரிசோதித்துவிட்டு அவர் இறந்து விட்டதாக உறுதிப்படுத்திய பிறகு தான் உடலை தூக்கு கயிற்றில் இருந்து இறக்குவார்கள். கைதியை தூக்குமேடையில் ஏற்றி கை, கால்களை கட்டி முகத்தில் கருப்புதுணியை போட்டபிறகு, சிறை சூப்பிரண்டின் சிக்னலுக்காக தலைமை வார்டர் காத்திருப்பார். சூப்பிரண்டு கையில் வைத்துள்ள கைக்குட்டையை அசைத்தவுடன் தலைமை வார்டர் தூக்குமேடை அருகே உள்ள இரும்புராடை இழுத்து தண்டனையை நிறைவேற்றுவார்.

சிறைச்சாலையில் அதிகாலை 6 மணிக்கு கைதிகளின் அறையை திறப்பதற்கு முன்பே ஒருவரை தூக்கில் போட்டு விட வேண்டும். தூக்குமேடைக்கு கைதியை அழைத்து வரும்போது, அவரது முகத்தை மறைப்பது போன்ற தொப்பியை அணிவித்து தான் அழைத்து வருவார்கள். ஏனெனில் தூக்குமேடையை அந்த கைதி பார்க்கக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு. தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் கைதியை அதிகாலையிலேயே குளிக்க வைத்து, புதிய சீருடை அணிவிப்பார்கள். மேலும், அவரது கடைசி விருப்பம் ஏதாவது இருந்தால் அது சாத்தியப்படும் வகையில் இருந்தால் நிறைவேற்றுவதுண்டு. பொதுவாக தூக்குமேடை என்பது சிறை வளாகத்தின் சுவரையொட்டியுள்ள பகுதியில் அமைக்கப்பட்டு இருக்கும். அதன் அருகிலேயே சிறைக்கு வெளியே செல்ல ஒரு வாசல் கதவு இருக்கும். அந்த கதவு சீல் வைக்கப்பட்டு இருக்கும். தூக்கிலிடப்பட்ட நபர் இறந்தபிறகு, அந்த கதவை திறந்து உடலை வெளியே கொண்டு சென்றுவிட்டு, மீண்டும் அந்த கதவு பூட்டி சீல் வைக்கப்பட்டுவிடும்.

எனது பணிக்காலத்தில், கடந்த 1994-ம் ஆண்டு கோவை சிறையில் தந்தை, மகன் இருவரையும் தூக்கில் போடவேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. இதில் மகனை தூக்குமேடைக்கு அழைத்து சென்றபோது, அவரது செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அறையில் இருந்து அவரை தூக்குமேடைக்கு அழைத்து வரும்போது, முகத்தை பாதி மறைக்கும் வகையில் தொப்பியை அணிவித்து இருபுறமும் சிறை வார்டர்கள் கையை பிடித்துக்கொண்டு அழைத்து வந்தனர். தூக்குமேடைக்கு 200 மீட்டர் தூரத்தில் வந்தபோது, அந்த கைதி திடீரென தலையை தூக்கினார். இதில் முகத்தை மறைத்து இருந்த துணி பின்பக்கமாக சென்றுவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள், அந்த கைதியின் பெயரை கூறி ஏன் இவ்வாறு செய்தாய்? என்றோம். அதற்கு அவர் முகத்தை மறைத்து இருந்தால் காலில் கற்கள் ஏதாவது குத்தி காயம் ஏற்பட்டுவிடுமே என்றார். அடுத்த சில நிமிடங்களில் தூக்கிலிடப்பட்டு உயிரை இழக்க இருக்கும் நிலையில் அவர் தனது காலில் காயம் ஏற்பட்டுவிடும் என கூறியது வியப்பாக இருந்தது.

இதேபோல் அதே வழக்கில் தந்தையை தூக்கிலிடுவதற்கு முன்பு அவர் தனது விருப்பமாக, எனது மகன் இறப்பதற்கு முன்பாக என்னை தூக்கில் போட்டுவிடுங்கள் என்றார். ஆனால் நாங்களோ அவரிடம், சட்டத்தின்படி தான் எதையும் செய்ய முடியும் என்று கூறிவிட்டு வரிசை எண்ணை பார்த்தோம். அதில் மகனின் வரிசை எண்ணிற்கு முன்பாக தந்தையின் வரிசை எண் இருந்தது. அதனால் அவரது விருப்பப்படியே முதலில் அவரை தூக்கிலிட்ட பிறகு, அவரது மகனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஒரு கைதியை தூக்கில் போட்டு அவருடைய உயிரை பறிப்பதற்கு பதிலாக அவர் சிறைக்குள் இருந்தபடியே உழைப்பின் மூலம் சமுதாயத்துக்கான பங்களிப்பை செய்ய வேண்டும். கொடூர குற்றங்களில் ஈடுபடுபவர்கள் அச்சம் கொள்ள வேண்டும் என்றால் தூக்கு தண்டனை என்பது சட்டப்புத்தகத்தில் இருக்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்